சென்னை: ஒட்டுமொத்த நாடும் வெக்கப்பட வேண்டும் என்று மணிப்பூர் வீடியோ குறித்து நடிகை ரோகிணி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மெய்தி சமூகத்தினருக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து கூகி பழங்குடியினா் நடத்திய போராட்டம் இனக்கலவரமாக மாறியது. கடந்த இரண்டு மாதங்களாக அங்கு வன்முறை நீடித்து வருகிறது.
மணிப்பூர் வீடியோ: இதையடுத்து, கூகி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கிய கலவரக்காரர்கள் அந்த பெண்களை ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த மோசமான சம்பவம் நாட்டையே குலுக்கியது, இரு பெண்களுக்கு நடந்த பாலியல் வன்முறையைக் கண்டித்து டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் மகளிர் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெட்கித் தலைகுனிய வேண்டும்: மணிப்பூர் விவகாரம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விஷயத்தை நினைத்து நாம் வெட்கித் தலைகுனிய வேண்டும். இந்த விவகாரத்தில் நாம் அனைவரும் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரும், பாஜகவைச் சேர்ந்தவருமான நடிகை குஷ்பு கூறியிருந்தார்.
வெட்கப்படனும்: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள நடிகை ரோகிணி, ஒட்டு மொத்த நாடும் வெட்கப்படக்கூடிய அளவிற்கு ஒரு விஷயத்தை செய்து வைத்து இருக்கிறார்கள். பெண்ணை நிர்வாணமாக்கி, அவளை வன்புணர்வு செய்ததை நினைத்து நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும். சம்பவம் நடந்து இத்தனை நாட்கள ஆன பிறகும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மேலும் வெட்கப்படக்கூடிய விஷயமாகும்.
பெண்ணின் உடல் மீது குடும்ப கௌரம்: இந்த சம்பவம் என்ன சொல்கிறது என்பதை நாம் யோசித்து பார்க்க வேண்டும், இந்த சமூதாயத்தில் பெண்ணின் உடல் மீது குடும்ப கௌரவத்தையும், சமூகத்தில் இருக்கிற அனைவரின் கௌரவத்தையும் புகுத்தி வைத்திருப்பதால் தான் இப்பட செய்யத் தோன்றுகிறது. பெண்களை நிர்வாணப்படுத்திவிட்டால், உங்கள் சமூகத்தை அவமதித்த மாதிரி நினைக்கிறார்.
பெண்ணின் உடல் அவமானத்தின் சின்னமா: அப்போ பெண்களின் உடல் அவமானத்தின் சின்னமாக இந்த சமூதாயம் உருவாக்கி வைத்து இருக்கிறது. பெண் உடல் மீது இந்த சமூதாயத்தின் பார்வையை களையும் போதுதான், பெண்களுக்கு விடுதலை கிடைக்கும். அதற்கு முன் இதுபோன்ற குற்றங்கள் நடந்தால், உடனடியாக அந்த இடத்தில் நிற்கவேண்டிய காவல்துறையினர் வேடிக்கைப்பார்த்துக் கொண்டு நிற்பது எந்த வகையில் நியாயம். இதற்கு சரியான பதிலை பிரதமர் மற்றும் அம்மாநில முதலமைச்சர் சொல்லியே ஆகவேண்டும் என்று நடிகை ரோகிணி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.