சென்னை: தமிழ் சினிமாவின் தற்போது படு பிஸியான நடிகராக இருக்கும் யோகிபாபு இன்று பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவர் சொத்து குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் ரஜினி, அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களின் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார்.
லொள்ளு சபா: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் உதவி இயக்குநராகப் பணியாற்றி பாபு.அந்த நிகழ்ச்சியில் ஒருசில காட்சிகளில் நடித்திருந்தார். அதன் பிறகு 2009இல் சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் அமீர் ஹீரோவாக நடித்த யோகி படத்தில் ஒரு சிறிய நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படமே அவருடைய அடையாளப் பெயராக மாறியது.
டாப் நடிகர்களின் படங்களில்: இதைத் தொடர்ந்து பையா, கலகலப்பு, அட்டகத்தி, சென்னை எக்ஸ்பிரஸ், சூது கவ்வும், வீரம், மான் கராத்தே, அரண்மனை, ஐ என அனைத்து டாப் நடிகர்களின் படங்களில் நடித்திருந்தார். 2015ம் ஆண்டு காக்கா முட்டை படத்தில் எனக்கே விபூதி அடிக்க பாத்தீல்ல என்ற டையலாக்கை பேசி பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.

எதார்த்தமான நடிப்பு: நகைச்சுவையில் கலக்கி வந்த நடிகர் யோகி பாபு, தர்மபிரபு படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து மண்டேலா என்ற படத்தில் முடித்திருத்தும் தொழிலாளியாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றார். அடுத்ததாக மாரி செல்வராஜின் இரண்டாம் திரைப்படமான கர்ணன் படத்தில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து நகைச்சுவை மட்டுமில்லை அனைத்தும் கேரக்டரும் தனக்கு கைவந்த கலை என்பதை நிரூபித்தார்.
சொத்து மதிப்பு: தற்போது யோகிபாபு இல்லாமல் எந்த படமும் இல்லை என்று சொல்லு அளவுக்கு அனைத்து படங்களிலும் நடித்து வரும் யோகி பாபுவின் சொத்து குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பல திரைப்படங்களை கையில் வைத்து இருக்கும் யோகி பாபு, ஒரு படத்திற்கு சுமார் 3கோடி ரூபாயை சம்பளம் வாங்கும் நிலையில், நடிகர் யோகி பாபுவின் சொத்து மதிப்பு ரூ.40 கோடி என தகவல் வெளியாகி உள்ளது.