மேட்டூர்: ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சு, ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு என முதல்வர் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குரும்பபட்டி, காவடிக்காரனுர், வெள்ளகல்பட்டி, எட்டிக்குட்டைமேடு பகுதிகளில் கொங்கணாபுரம் ஒன்றியம் சார்பில் அமைக்கப்பட்ட அதிமுக கொடியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு ஏற்றி வைத்தார். முன்னதாக, அவருக்கு, கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அதிமுக ஆட்சியில் 234 தொகுதியிலும் தரமான சாலைகள் அமைக்கப்பட்டது. புறவழிச்சாலை அமைக்கப்பட்டு, போக்குவரத்து நெரிசலை குறைத்தது அதிமுக. தேர்தல் நேரத்தில் பொய்யை சொல்லி, வாக்குகளை பெற்று, மக்களை ஏமாற்றி, ஆட்சிக்கு வந்த பிறகு ஓட்டு போட்ட மக்களை மறந்தவர் தான் இன்றைய முதல்வர். அனைத்து குடும்ப தலைவிக்கும் மாதம் ரூ 1,000 உதவித்தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்தார். தற்போது, தகுதியானவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கிறார். ஒரு குடும்பத்தில் முதியோர் உதவித்தொகை பெறுபவர்கள் இருந்தால் உரிமை தொகை கிடையாது என தெரிவித்துள்ளனர்.
ஆட்சிக்கு வந்த பிறகு அந்தர் பல்டி அடித்து விட்டார். ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சு, ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு என முதல்வர் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் வைக்கப்பட்டது. இன்றைக்கு விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது. அனைத்து பொருட்களின் விலையும் 50 சதவீதம் உயர்ந்துள்ளது. இன்றைக்கு தக்காளி கிலோ ரூ.105 ஆக உயர்ந்துள்ளது. எடை கணக்கில் வாங்கிய நிலை மாறி எண்ணிக்கையில் வாங்கும் நிலை உருவாகியுள்ளது. தக்காளிக்கு பதில் ஆப்பிள் வாங்கி சாப்பிட்டு கொள்ளலாம். ஆப்பிள் விலைக்கு தக்காளி போய்விட்டது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு புதிய திட்டங்களை கொண்டு வரவில்லை. அதற்கு பதிலாக, அதிமுக திட்டங்களை தான் திறந்து வைக்கிறார். பனா நினைவு சின்னத்துக்கு ஒதுக்கிய ரூ.82 கோடியை அரசு பள்ளி மாணவர்களுக்கு பயன்படுத்த வேண்டும். இந்தியாவில் கல்வி கற்பதில் தமிழகம் முதலிடம். ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஊழல் அதிகமாகியுள்ளது. இந்த ஆட்சியில் பலர் சிறைக்கு செல்ல தயாராகி விட்டனர். எத்தனை பேர் போவார்கள் என தெரியவில்லை. என் மீது எத்தனை வழக்கு போட்டாலும் கவலையில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும் போது, மக்களுக்காக குரல் கொடுத்து 7 முறை சிறை சென்றுள்ளேன்.
ஒரு அமைச்சர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, எப்படி அமைச்சராக இருக்க முடியும். டாஸ்மாக் பார்களை அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக நடத்தியது.
அதிமுகவில் 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு வைக்கப்பட்டது. இன்னும் 8 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டால், தமிழகத்தில் அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சியாகும் அதிமுக. அதிமுகவில் வெற்றிடம் என்பது இல்லை. அதிமுக பலம் வாய்ந்த கட்சி என்பதை நிருப்பித்து காட்டியுள்ளது.