Doctor Vikatan: அறிகுறியே தெரியாமல் மாரடைப்பு வந்து போயிருக்க வாய்ப்பு உண்டா?

Doctor Vikatan: என் வயது 59. சமீபத்தில் முழு உடல் ஹெல்த் செக்கப்புக்காக போயிருந்தபோது மருத்துவர் சொன்ன தகவல் அதிர்ச்சியளித்தது. உங்களுக்கு ஏற்கெனவே மைல்டு அட்டாக் வந்திருக்கிறது என்று சொன்னார். ஹார்ட் அட்டாக் என்பது இப்படி அறிகுறியே இல்லாமல் வந்து போயிருக்க முடியுமா? இனி நான் கவனமாக இருக்க வேண்டுமா? இதை எப்படிப் புரிந்துகொள்வது?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

உங்களுக்கு மாரடைப்பு வந்ததாக மருத்துவர் சொன்னது நிச்சயம் உண்மையாக இருக்கலாம். மாரடைப்பு என்றதுமே தாங்க முடியாத நெஞ்சுவலி, வலது தோள்பட்டையில் வலி, அது கைகளுக்குப் பரவுதல் போன்ற பிரதான அறிகுறிகள் நிச்சயம் இருக்கும் என பலரும் நினைத்துக் கொள்கிறார்கள்.

ஆனால் மாரடைப்பின் அறிகுறி என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரிதான் இருக்க வேண்டும் என அவசியமில்லை. சிலருக்கு அது வித்தியாசமான அறிகுறிகளைக் காட்டலாம். உதாரணத்துக்கு, நெஞ்செரிச்சல், முதுகுவலி, கைகளில் மட்டும் குடைச்சல், தாடையில் வலி போன்ற அறிகுறிகளாகவும் வெளிப்படலாம். அது ஹார்ட் அட்டாக்கின் அறிகுறி என்பதை உணராமலேயே சிலர் அதிலிருந்து மீண்டிருப்பார்கள். இது போன்ற அறிகுறிகள் நீரிழிவு பாதிப்புள்ளவர்களுக்கும் பெண்களுக்கும் அதிகம் வரலாம்.

சிலருக்கு அறிகுறிகளே இருக்காது…. ஆனால் ரத்தக்குழாய் மூடியிருக்கும். வேறொரு சந்தர்ப்பத்தில் இசிஜியோ, எக்கோவோ எடுக்கும்போது ஏற்கெனவே பாதித்த ஹார்ட் அட்டாக் பற்றி அதில் தெரியவரும். குறிப்பிட்ட ஒரு பகுதி சரியாகச் செயல்படாமல் இருப்பதோ, இசிஜியில் அந்தப் பகுதியில் வித்தியாசமான மாறுதல்கள் இருப்பதோ தெரியவரும்.

ECG

எனவே உங்களுக்கு ஏற்கெனவே மாரடைப்பு வந்திருப்பதால் இனி நீங்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது மிக முக்கியம். உங்களுக்கு எந்தெந்த ரத்தக் குழாய்களில் அடைப்பு இருக்கிறது என பரிசோதனை செய்து பார்க்கவும் உங்கள் மருத்துவர் அறிவுறுத்தியிருப்பார். அதன்படி தேவையான டெஸ்ட்டுகளை செய்துபார்த்து மருத்துவர் சொல்லும் சிகிச்சைகளைப் பின்பற்றுங்கள். மீண்டும் இதே பாதிப்பு வராமல் தடுப்பதற்கான விஷயங்களைப் பின்பற்றுங்கள். அதை ‘செகண்டரி ப்ரிவென்ஷன்’ என்று சொல்வோம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.