காய்கறி விலை எப்போது குறையும்? கர்நாடகா டூ தமிழ்நாடு… பறந்து வந்த குட் நியூஸ்!

தக்காளி விலையை கேட்டால் தக்காளி சட்னிக்கு குட்பை சொல்லி விட வேண்டியது தான். ஏனெனில் ஒரு கிலோ 100 ரூபாயை தாண்டி 150ஐ தொட்டுவிட்டது. வெங்காயத்தின் விலையை கேட்டால் சாம்பாருக்கு டாட்டா சொல்லி விடும் நிலை தான். ஏனெனில் 20 ரூபாயை தாண்டி 30ஐ தாண்டிவிட்டது. இவை இரண்டும் இல்லாமல் அப்படி என்ன தான் செய்வது என இல்லத்தரசிகள் தீராத குழப்பத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

காய்கறி சந்தைகளில் இஞ்சியின் விலை கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை

காய்கறி விலை அதிகரிப்பு

கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் இதே நிலை தான். கூடவே மற்ற காய்கறிகளும் ஜோடி போட்டு கொண்டு தாறுமாறாக விலை ஏறியுள்ளன. சில்லறை வியாபாரம் தான் இடியாக வந்து விழுகிறது. எனவே மொத்தமாக வாங்கி வந்து விடலாம் என கோயம்பேடு மார்க்கெட்டிற்கு சென்றால் அங்கும் அதேநிலை தான். இருக்கும் காய்கறியை வைத்து நிலைமையை சமாளிப்பது தான் ஒரே வழி என்ற நிலைக்கு இல்லத்தரசிகள் வந்துவிட்டனர்.

கர்நாடகாவில் பருவமழை

இதன் பின்னணி குறித்து விசாரித்தால் மழை தான் முக்கிய பிரச்சினை எனக் கூறுகின்றனர். தமிழகத்தில் தான் பெரிதாக மழையே இல்லையே? விட்டு விட்டு பெய்து வரும் மிதமான மழைக்கா இப்படி? எனக் கேள்வி எழுப்பினால் பலரும் கர்நாடகாவை நோக்கி கைகாட்டுகின்றனர். அங்கிருந்து தான் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் வட தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். குறிப்பாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்.

காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு

அங்கு தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டி வருகிறது. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அளவிற்கு கர்நாடகாவில் மழை வெளுத்து வாங்கி வருகிறதாம். இதனால் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அப்படியெனில் மழை குறையாதா? காய்கறி விலை குறையாதா? என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.

காய்கறி விலை குறையுமா?

இதுபற்றி சென்னையை சேர்ந்த மொத்த காய்கறி விற்பனை டீலர்களிடம் கேட்கையில், அடுத்த வாரம் முதல் காய்கறி விலை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. ஆனால் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்க வேண்டாம். சில மாதங்கள் கழித்தே பழைய விலைக்கு திரும்பும்.

தக்காளி விளைச்சல் பாதிப்பு

குறிப்பாக தக்காளியை பொறுத்தவரை மழையால் சேதமடைந்து விடுகிறது. இதனால் விவசாயிகள் நஷ்டத்தை சம்பாதிக்கின்றனர். பக்குவமாக பார்த்து பார்த்து வேலை செய்து கச்சிதமாக மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து சேர்ப்பவர்களுக்கே தக்காளியால் கொள்ளை லாபம்.

இல்லத்தரசிகள் ஆறுதல்

மற்றவர்கள் பாடு திண்டாட்டம் தான். எனவே பிரச்சினை இல்லாத வேறு காய்கறிகளை பயிரிடும் நிலைக்கு மாறிவிட்டனர். எனவே தக்காளி விலை குறைய சிறிது காலம் ஆகும். மற்ற காய்கறிகளின் விலையில் சரிவை எதிர்பார்க்கலாம் என இல்லத்தரசிகளை பெருமூச்சு விட வைக்கும் பதிலை கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.