தருமபுரி: தமிழகத்தில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்க ஆளுநர் கையெழுத்திடக் கோரி, தருமபுரியில் ஒரு லட்சம் கையெழுத்து பெறும் இயக்கம் இன்று தொடங்கப்பட்டது.
இதற்காக உருவாக்கப்பட்ட சித்த மருத்துவப் பல்கலைக்கழக வேண்டுகைக் குழுவும், தருமபுரி தமிழர் மரபுச் சந்தை, தருமபுரி மக்கள் மன்றம் ஆகிய அமைப்புகளும் இணைந்து தருமபுரி மாவட்டதில் 1 லட்சம் கையெழுத்து பணியை இன்று (ஜூலை 23) தொடங்கினர். இக்குழுவைச் சேர்ந்தவர்கள் கூறியது: ”பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் அதிகாரப் பூர்வமான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அரசுப் பல்கலைக்கழகம் அவசியம். இந்தியாவில் ஆயுர்வேத மருத்துவப் பல்கலைக்கழகம், ஹோமியோபதி மருத்துவப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆங்கில மருத்துவத்துக்கு ஏராளமான பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆனால், பல ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட, தமிழ் மண்ணின் கலாச்சாரத்துடன் இணைந்த மூத்த மருத்துவ முறையான சித்த மருத்துவத்துக்கு இதுவரை பல்கலைக்கழகம் இல்லை.
இந்தக் குறையைப் பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாட்டில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, நிதி ஒதுக்கீடு செய்து நிலமும் தேர்வு செய்யப்பட்டு விட்டது. ஆனால், சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட முன்வடிவு ஆளுநர் கையெழுத்துக்காக காத்திருக்கிறது. எனவே, சித்த மருத்துவப் பல்கலைக் கழக சட்ட முன்வடிவில் ஆளுநர் கையெழுத்திட வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவப் பல்கலைக்கழக வேண்டுகைக் குழு என்ற பெயரில் அமைப்பு தொடங்கப்பட்டு, மூத்த சித்த மருத்துவரும் உலகத் தமிழ் மருத்துவக் கழகத் தலைவருமான மைக்கேல் செயராசு, எழுத்தாளர் முத்துநாகு, செயல்பாட்டாளர் சீ.அ.மணிகண்டன் ஆகியோர் மாநில ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுகின்றனர்.” இவ்வாறு அவர்கள் கூறினர்.
தருமபுரி அடுத்த பாரதிபுரம் பகுதியில் செயல்படும் மரபுச் சந்தையில் இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கியது. சித்த மருத்துவப் பேராசிரியர் மு.மாதேஸ், இயக்கத்தை தொடங்கிவைத்து கையெழுத்திட்டார். தொடர்ந்து பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் கையெழுத்து பெறும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கையெழுத்து இயக்கத்தைத் தொடர்ந்து, மரபுச் சந்தையில் மூத்த தமிழர் மருத்துவம் என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தமிழர் மரபுச் சந்தை மற்றும் தருமபுரி மக்கள் மன்ற நிர்வாகிகள் உமா சங்கர், நிர்மல்குமார், சிவக்குமார், செந்தில் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.