உத்தரப் பிரதேசத்தில் வாரணாசி எனப்படும் காசியில், காசி விஸ்வநாதர் கோயிலை அடுத்து ஞானவாபி மசூதி அமைந்திருக்கிறது. முகலாய மன்னர் ஔரங்கசீப் உத்தரவின்பேரில் காசி விஸ்வநாதர் கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு, ஞானவாபி மசூதி கட்டப்பட்டது என்பது இந்துக்கள் தரப்பின் வாதமாக இருந்துவருகிறது.

இந்த நிலையில், ஞானவாபி மசூதியின் சுவற்றிலுள்ள சிங்கார கவுரி அம்மனை வழிபட அனுமதிக்கக் கோரி நான்கு இந்து பெண்கள் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் 2021-ம் ஆண்டு மனு தாக்கல் செய்தனர். அதை விசாரித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதியில் களஆய்வு நடத்த உத்தரவிட்டது. அதன்படி, மசூதியில் ஆய்வு நடத்தப்பட்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் மசூதியின் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஞானவாபி மசூதியின் ஒட்டுமொத்த வளாகத்திலும் தொல்லியல் மற்றும் அறிவியல்பூர்வ ஆய்வு மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுமீதான விசாரணையின்போது, ‘காசி விஸ்வநாதன் கோயில்மீது ஞானவாபி மசூதி கட்டப்பட்டிருக்கிறது. அதை உறுதிசெய்ய ஞானவாபி மசூதியில் தொல்லியல்துறை ஆய்வு நடத்த வேண்டும்’ என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

ஞானவாபி மசூதி நிர்வாகத்தின் தரப்பில், ‘எந்தவொரு வழிபாட்டுத் தலத்தின்மீதும் மசூதி கட்டப்படவில்லை’ என்று வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்த அனுமதி அளித்து, ஜூலை 21-ம் தேதி உத்தரவிட்டது. அந்த உத்தரவில், ‘ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல்துறை அறிவியல் பூர்வமான கள ஆய்வை நடத்த வேண்டும். ஒசுகானா பகுதியில் மட்டும் ஆய்வு நடத்தக் கூடாது. ஆய்வு நடத்தும்போது மசூதிக்கு எவ்வித சேதமும் ஏற்படக் கூடாது. ஆய்வு நடக்கும்போது தொழுகை நடத்தலாம். ஆகஸ்ட் 4-ம் தேதிக்குள் தொல்லியல்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டது.
வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் அந்த உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரி, மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையில், தொல்லியல்துறையினர் வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஜூலை 24-ம் தேதி காலை ஞானவாபி மசூதியில் ஆய்வைத் தொடங்கினர். அதையொட்டி, மசூதி அமைந்திருக்கும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டனர். ஆய்வின்போது, தொல்லியல்துறை அதிகாரிகளும், வழக்கைத் தொடர்ந்தவர்களும், ஞானவாபி மசூதி நிர்வாகத்தினரும் மசூதிக்குள் இருந்தனர்.

அந்த நேரத்தில், மசூதி நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. பின்னர், ஜூலை 26-ம் தேதி மாலை 5 மணி வரை மசூதிக்குள் ஆய்வு நடத்த தொல்லியல்துறைக்கு தடைவிதித்து உச்ச நீதிமனறம் உத்தரவிட்டது. இந்த இரண்டு நாள்கள் அவகாசத்தில், வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஞானவாபி மசூதி நிர்வாகம் மேல்முறையீடு செய்யலாம். ஜூலை 26-ம் தேதி மாலைக்குள் மசூதி நிர்வாகத்தினர் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தால், அதை ஏற்றுக்கொள்ளுமாறு அலகாபாதி உயர் நீதிமன்றத்தின் பதிவாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.