இரண்டு மாதங்களைக் கடந்தும் தொடரும் மணிப்பூர் கலவரம், இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. இந்த நிலையில், மே 4-ம் தேதி இரண்டு பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, நிர்வாணமாக இழுத்துச் செல்லப்படும் வீடியோ 76 நாள்களுக்குப் பிறகு வெளியாகி இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம், இங்கிலாந்து போன்ற நாடுகள் தங்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தன.

இதற்கு முன்னர் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, “மணிப்பூர் வன்முறை நெருக்கடியைத் தீர்க்க அமெரிக்கா எந்த வகையிலும் உதவ தயாராக இருக்கிறது. அமெரிக்காவிற்கு மனிதம்மீது மிகுந்த அக்கறை உண்டு” எனத் தெரிவித்திருந்தது. ஆனால், இந்த வீடியோ விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டப் பிறகே பிரதமர் மோடி 30 வினாடிகள் மணிப்பூர் குறித்துப் பேசினார். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து, சிலர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த நிலையில், மணிப்பூர் பெண்களின் நிர்வாண வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அமெரிக்கா கடும் கண்டனத்தைப் பதிவுசெய்திருக்கிறது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர், “மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு நடந்தது மிருகத்தனமானது, பயங்கரமானது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்கா தனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது” எனத் தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது.