வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
அன்பான மென்மையான மனிதர்.. அழுத்தமான படங்களுக்குச் சொந்தக்காரர். இயக்குனர், கதாசிரியர் வசனகர்த்தா , நடிகர் என்ற பன்முகத் திறமை கொண்டவர் இவரது பெரும்பாலான படங்கள் இயல்பான காட்சிகளையே கொண்டிருக்கும். ஆச்சரியப்பட வைக்கும் திரைக்கதை+அதற்கு மிகவும் சரியாக பொருந்தக்கூடிய நடிகர்கள் என தமிழ் சினிமாவில் வெற்றி கொடி நாட்டியவர்களில் ஒருவர்.
இவரின் தனித்துவமான அம்சமே இவரது கதாபாத்திர உருவாக்கம் மற்றும் ‘பளிச்’ வசனங்கள் தான். தமிழ்த் திரையுலகில் எத்தனையோ இயக்குனர்கள் இருந்தாலும் சிலரிடம்மட்டுமே மக்கள் மரியாதையும் பிரியத்தையும் வைத்திருப்பார்கள். அவர்களில் முதன்மையானவர் . நகைச்சுவை காட்சிகளில் பிறரை மட்டம் தட்டி பேசுவது / இரட்டை அர்த்த உள்ள வசனங்கள் இருக்கவே இருக்காது என்பது இவரின் ஸ்பெஷல்.

தமிழ் சினிமாக்களில் ஆணாதிக்கம்.. பெண்களை அடக்கி ஒடுக்கும் ஆண்கள்.. தேவையற்ற சண்டை காட்சிகள்.. படு அபத்தமான காதல்.. நகைச்சுவை என்ற பெயரில் விரசம்.. என்று சினிமா போய்க் கொண்டிருந்த நேரத்தில் தமிழ் சினிமாவை வேறொரு தளத்துக்கு அழைத்துச் சென்றவர்.
ஆம்.. இயக்குனர் மகேந்திரன் அவர்களுக்குத்தான் இன்று( 84 வது) பிறந்தநாள்.
அவர் இயக்கிய எனக்கு மிகவும் பிடித்த சில திரைப்படங்கள்.. அதில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் வசனங்கள் .
(உங்களுக்கும் பிடிக்கும் என்றே நம்புகிறேன்.)
முள்ளும் மலரும்(1978)
இயக்குனர் மகேந்திரனின் அழியா காவியம். சின்ன சின்ன கோபதாபங்களையும், ஈகோவையும் மிக மிக நுட்பமாக காட்சியாக்கப்பட்டிருக்கும்.
ஒரு சுய கவுரவம் கொண்ட மனிதனின் வாழ்க்கையை அதன் இயல்பான அழகுடன் மிகுந்த நம்பகத்தன்மையுடன் சொன்னது. (வின்ச் ஆப்ரேட்டர் பற்றி எடுக்கப்பட்ட ஒரே தமிழ் படம்)
எளிமையும் யதார்த்தமுமான படத்தில் ரஜினி கண் பார்வையிலேயே காட்டும் உணர்ச்சிகள் அற்புதமானவை.
காளி நல்லவன் ஆனால் சூழ்நிலை காளியை மோசமான மனிதனைப் போல் தோன்றச் செய்கிறது. தவறாக புரிந்து கொள்ளப்படுவதே படத்தின் மைய புள்ளி… அடக்கி வைக்கப்பட்ட கோபத்தின் வெளிப்பாட்டை அவ்வப்போது மிக அழகாய் வெளிப்படுத்தி இருப்பார் ரஜினி. அழை அதை அழகாய் படம் பிடித்து இருப்பார் இயக்குனர்.

காளி பாத்திரம் வெகு நுட்பமானது. “கெட்ட பய சார் இந்தக் காளி” தலைமுறை கடந்தும் வசீகரிக்கும் அழகான வசனம். ஒரு தன்மானம் உள்ள கிராமத்து இளைஞனின் உள்ளக் கொதிப்பின் வெளிப்பாடு. சூப்பர் ஸ்டார் ரஜினியை கலைஞனாக மாற்றிய திரைப்படம். ரஜினி அவர்கள் “ஒரு பேட்டியில் பாலச்சந்தர் அவர்கள் உனக்கு மிகவும் பிடித்த திரைப்படம்.. நீ நடித்ததில்..எது என்று கேட்டதற்கு” முள்ளும் மலரும் ‘என்றே குறிப்பிட்டதாகச் சொல்லி இருப்பார்.
கோபம் ,பாசம் ,வெறுப்பு இயலாமை எதார்த்தமான நடிப்பில் சிகரத்தை தொட்டிருப்பார் ரஜினி . தன்மானம் உள்ள இளைஞனாக காளிக்கு நிகராக இன்னும் ஒரு கதாபாத்திரம் இதுவரை தமிழ் திரையில் உருவாக்கப்படவில்லை என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லலாம்.
ஒரு சூரியன் ஒரு நிலவு வரிசையில் ” முள்ளும் மலரும்”. ஒரு காளி…
‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு ஒரு கவலை இல்லை… பாடல் 44 வருடங்களை கடந்தும் சும்மா” கிழி” என்று Vibe பண்ணக் கூடிய ரகம்.
துரோகம், அவமானம், வலி ,வேதனை நம்மை சூழ்ந்திருக்கும் போது போடா ஜூஜூபி என்று நம்மை முன்னோக்கி உந்தி தள்ளும் பாடலிது. இயக்குனர் அதை செதுக்கி நமக்கு கொடுத்தது இன்னும் சிறப்பு . இந்தப் பாடலின் வெற்றிக்கு காரணம் தலைவரின் வெறித்தனமான ஆட்டம் . மலைவாழ் மக்களின் பாரம்பரிய இசையை தங்க தட்டில் வார்த்து கொடுத்திருப்பார் இசைஞானி.

பயமோ தோல்வியோ எதைக் கண்டு அஞ்சினாலும் இந்தப்பாடலை ஒரு முறை கேட்டால் நம்மேல் நம்மை அறியாமல் ஒரு தன்னம்பிக்கை வந்துவிடும். என் மனம் சோர்வாக இருக்கும் தருணங்களில்.. இந்தப் பாடலை நான் சத்தம் போட்டு பாட ..அடுத்த நிமிஷம் சோகம் சுகமாகும். ரஜினிக்கு முறையான நடனம் தெரியாவிட்டாலும் இந்தப் பாடலில் அவருடைய ஒவ்வொரு அசைவும் ரசிக்கும்படி படமாக்கப்பட்டிருக்கும்.
முள்ளும் மலரும் …. அழகோஅழகு…
*ஜானி(1982)
இத்திரைப்படத்தில் ரஜினி, ஜானி என்ற நூதன திருடனாகவும், வித்தியாசாகர் என்னும் முடி திருத்துபவராகவும் இரட்டை வேடத்தில் கலக்கி இருப்பார். வித்யாசாகர் தன் வேலைக்காரியான பாமாவை(தீபா) விரும்பி அவளை வீட்டுக்காரியாக்க முடிவு எடுக்கும் சமயத்தில் அவளை ஒரு துணிக்கடைக்கு அழைத்துச் செல்வார் .அங்கே பாமாவிற்கு தான் எடுக்கும் ஒவ்வொரு உடையையும் விட அங்கிருக்கும் மற்ற உடைகள் சிறப்பானதாக தோன்றும்.. அதை பார்க்கும் ஜானி,
” ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்கோ இந்த உலகத்தில் எதை எடுத்தாலும் ஒன்னை விட ஒண்ணு பெட்டராதான் இருக்கும். அதுக்கு ஒரு முடிவே இல்ல?!” அதுக்காக நம்ம மனச மாத்திக்கிட்டே போக கூடாதுன்னு” சூப்பரா ஒரு வசனம் பேசுவார் .இதை எப்போதுமே மனதில் கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருக்கும்.. இத்திரைப்படத்தில் ரஜினிக்கும் ஸ்ரீதேவிக்கும் இடையிலான காதல் அத்தியாயங்கள் ‘அழகியல்’ என்றால் இன்னொரு ரஜினிக்கும் தீபாவிற்கும் இடையில் இடம்பெறும் காதல் ‘உளவியல்’ ரீதியானவை.

ரஜினி தான் சிறந்த நடிகர் என்பதற்கு ஜானி ஒரு உதாரணம் . ரஜினியிடம் ஸ்ரீதேவி தன் காதலைச் சொல்லும் காட்சி ரசனையானது தனித்துவமானது. ஒரு பொழுதுபோக்கு திரைப்படத்தை எப்படி நேர்த்தியாகவும் அழுத்தமான கதையாகவும் சொல்ல முடியும் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம். அது மட்டுமல்லாமல் மனித உணர்வுகள் அன்பு கிடைக்கும்போது எப்படியெல்லாம் மாறுகின்றன என்பதையும்மிகத்துல்லியமாக பதிவு செய்திருப்பார் இயக்குனர்
இரண்டு விதமான கதாபாத்திரங்களை அவர் கையாண்டிருக்கும் விதம் ஆச்சரியப்படுத்தக் கூடியது.”ஒரு படம் என்ன செய்யும்? என்ற கேள்விக்கு ஒரு படம் எல்லாம் செய்யும்!” என்பதே பதிலாக அமையும்.
ரஜினிகாந்த்தின் ஜானி தமிழில் ஒரு மாற்றுசினிமா.
யாருமே இல்லாத மேடைக் கச்சேரி மழை புயல் மட்டுமே உண்டு. ஸ்ரீதேவி பாடுவதாக ஒரு பாடல் காட்சியை மிக அருமையாய் எடுத்திருப்பார் .
ஜானி ரசனைக்காரன்.
உதிரிப்பூக்கள்
காலத்தால் அழியாத படங்களில் ஒன்று ஒரு பெண்மையைப் பற்றிய க(வி)தை. ஆனந்த விகடனில் அதிக மதிப்பெண்கள் வாங்கிய ஒரு திரைப்படம். இந்தப் படத்தில் விஜயன் ‘சுந்தர வடிவேலு’வாகவே வாழ்ந்திருப்பார். ஒரு அமைதியான மனிதனுக்குள் அவ்வப்போது எழும் கெட்ட குணங்களை பேசிய ஒரு படம். (உதிரிப்பூக்கள் அஸ்வினியை மறக்க முடியுமா?! ) கண்களிலேயே தன் சோகத்தை வெளி காட்டி இருப்பார்இயக்குனர் மகேந்திரன் அவர்கள்தனது படங்களில் பெண்களுக்கு அளித்த மதிப்பும் மரியாதையும் மகத்தானது.

நெஞ்சத்தைக் கிள்ளாதே
அண்ணன் அரவணைப்பில் இருக்கும் ஒரு பெண் தனக்கு விருப்பமில்லை என்றாலும் அண்ணனுக்காக திருமணம் செய்து கொள்கிறாள் பின்பு அவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது கதை இதை மிக அழகாக எடுத்துச் சென்று இருப்பார் இயக்குனர். பாடல்கள் ஒவ்வொன்றும் பட்டையை கிளப்பின. பாடல்களை படமாக்கிய விதம் அருமை.
*பூட்டாத பூட்டுக்கள்
பக்கம் பக்கமாக வசனங்கள் இல்லாமல் ஒரு வரி.. மௌனம்.. பின்னணி இசை.. இதைக் கொண்டு படத்தை வார்த்திருப்பார் இயக்குனர்.
*நண்டு/மெட்டி
தந்தையின் கட்டுப்பாடு ஆணாதிக்கம்… குடும்பங்களின் நிம்மதி எப்படி குலைக்கின்றன என்பதற்கு ‘நண்டு’ம் ‘மெட்டி’யும் சாட்சி.
ஆணாதிக்க குடும்பத்தில் பெண்கள் எவ்வாறு துயரப்படுகிறார்கள். அவர்களின் ஆதிக்கப் போக்கு குடும்பங்களை எவ்வாறெல்லாம் சீர்குலைக்கிறது என்பதை கவிதையாய் சொல்லி இருப்பார் படத்தில்.
நண்டு திரைப்படத்தில் இடம்பெற்ற,
“அள்ளித் தந்த வானம் அன்னை அல்லவா சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா
ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள்
இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள் “ என்ற பாடல் அந்தக்கால நினைவுகளை கண்ணீருடன் மீட்டெடுக்கும் ஒரு பாடல். உணர்வு ததும்ப மென்மையான குரலோசையில் இந்தப் பாடலை அள்ளித் தந்திருப்பார் மலேசியா வாசுதேவன். அவர் பாடிய பாடல்களில் இந்தப் பாடல் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். பாடலில் சோகம் இருக்காது ஆனால் பாடிய மலேசியா வாசுதேவன் அவர் குரலில் சோகம் இருக்கும் அந்த சோகம் நம் நெஞ்சை உலுக்கும்.
மெட்டியில் இடம்பெற்ற
” மெட்டி ஒலி காற்றோடு “என்ற பாடல் மென் சோகம் நிரம்பியது….
இப்படி தனது படங்கள் ..படங்களில் இடம்பெற்ற பெற்ற பாடல்கள், வசனங்கள் கதாபாத்திரங்கள் மூலமாக இன்னமும் நம்முடனே வாழ்ந்து கொண்டிருக்கும் இயக்குனர் மகேந்திரன் அவர்களுக்கு அழகான 84 ஆவது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
மிகவும் எளிமையான மனிதரான நீங்கள் விண்ணுலகில் இருந்தாலும் உங்கள் படங்கள் வசனங்கள் கதாபாத்திரங்கள் மூலமாக எங்கள் நெஞ்சில் எத்தனை யுகங்கள் ஆனாலும் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.
மீண்டும் ஒருமுறை அழகான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சார்!
உங்கள் படங்களின் மேல் தீரா காதல் கொண்டிருக்கும் பிரிய ரசிகை,
-ஆதிரைவேணுகோபால்.