சென்னை: நடைபாதைகளில் மாற்றுத்திறனாளிகளின் சக்கர நாற்காலிகள் செல்ல தடையாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புக் கம்பங்களை மாற்றியமைக்க கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான பாவனா என்பவர் தாக்கல் செய்த மனுவில், நடைபாதைகளில் வாகனங்கள் செல்வதை தடுக்கும் வகையில் தடுப்பு கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கம்பங்கள், விதிமுறைப்படி அமைக்கப்படவில்லை. மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு வெளியிட்ட விதிமுறைகளின்படி, நடைபாதைகளில், சக்கர நாற்காலிகள் செல்லும் வகையில் விதிமுறைகளின்படி உரிய இடைவெளியில் தடுப்பு கம்பங்கள் அமைக்கப்படவேண்டும். ஆனால் சென்னையில் பல இடங்களில் இந்த தடுப்புக் கம்பங்கள் மாற்றுத்திறனாளிகள் சுதந்திரமாக செல்ல முடியாத வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
எனவே, விதிகளுக்கு முரணாக தடுப்பு கம்பங்கள் அமைக்க தடை விதிக்க வேண்டும். விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள இதுபோன்ற தடுப்பு கம்பங்களை அகற்றி, விதிகளின்படி அமைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர், ரயில்வே துறைகளை சேர்க்க உத்தரவிட்டனர். மேலும், இந்த மனுவுக்கு தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.