மீண்டும் களத்தில் இறங்கிய ஸ்டாலின்: வண்டியை மகளிர் உரிமைத் தொகை முகாமுக்கு விடுங்க!

மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது மட்டும் தான் தன் எண்ணத்தில் இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

அந்த வகையில் பல்வேறு துறைகளையும் முடுக்கிவிட்டு மகளிர் உரிமைத் தொகை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜூலை 24ஆம் தேதி தருமபுரி மாவட்டம் தொப்பூரில் மகளிர் உதவித் தொகை திட்ட முகாமை தொடங்கி வைத்து பெண்களுடன் உரையாடினார்.

தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று திருச்சியிலிருந்து காரில் சென்று கொண்டிருந்த போது தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம், மனையேறிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விண்ணப்பங்களை பதிவு செய்த வந்த பெண்களிடம் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமங்கள் இருக்கிறதா, பணியாளர்கள், அதிகாரிகள் உங்களுடைய சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களை அளிக்கிறார்களா என்று கேட்டு, கலந்துரையாடினார்.

கரூரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் ரேஷன் கடை

அதுமட்டுமல்லாமல் பதிவு செய்யும் பணியை மேற்கொண்ட பணியாளர்களிடமும் பேசினார். தினமும் எவ்வளவு விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுகின்றன, பதிவு செய்கையில் தொழில்நுட்ப பிரச்சனைகள் ஏற்படுகிறதா என்று கேட்டறிந்தார்.

அத்துடன் பதிவு செய்ய வரும் பெண்களின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களை அளிக்க வேண்டும் என்றும், விண்ணப்பத்தாரர்களின் விவரங்கள் அடங்கிய பதிவேட்டினை சரியாக பராமரிக்க வேண்டும் என்றும் அறுவுறுத்தினார்.

முதல்கட்ட முகாம் ஜூலை 24 தொடங்கி ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 16ஆம் தேதி நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.