Karjani is ready to cross the border to protect the dignity of the country! | நாட்டின் கண்ணியத்தை காக்க எல்லை தாண்டவும் தயார் கர்ஜனை!

லடாக் : ”நாட்டின் மரியாதை மற்றும் கண்ணியத்தை கட்டிக்காக்க, எல்லை கட்டுப்பாடு கோட்டை தாண்டி செல்லவும் தயாராக இருக்கிறோம். அது போன்ற நிலை ஏற்பட்டால், வீரர்களுக்கு ஆதரவு அளிக்க பொதுமக்கள் தயாராக இருக்க வேண்டும்,” என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

லடாக் எல்லை பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்துடன் சண்டையிட்டு, 1999 ஜூலை 26ல், நம் வீரர்கள் வெற்றி பெற்றனர். திராஸ், கார்கில் மற்றும் படாலிக் பகுதிகளில் உள்ள மிக சவாலான மலை சிகரங்களிலும், கடுங்குளிரிலும் இந்த போர் நடந்தது.

இந்த கார்கில் போரில் நம் படையினர் பெற்ற வெற்றியின் 24ம் ஆண்டு நினைவு, ‘கார்கில் வெற்றி தினம்’ என்ற பெயரில் நேற்று கொண்டாடப்பட்டது.

இந்த போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் உட்பட கட்சி பாகுபாடு கடந்து பல்வேறு தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

லடாக்கில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவிடத்தில் நேற்று, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது:

கார்கில் போர் இந்தியா மீது திணிக்கப்பட்டது. இந்த பிரச்னையை பேச்சு வாயிலாக தீர்க்கவே, நாம் அப்போது முயற்சித்தோம். ஆனால், பாகிஸ்தான் ராணுவம் நம் முதுகில் குத்தியது.

நாட்டுக்கு ஒரு ஆபத்து வந்தால், நம் படையினர் பின்வாங்காமல் திருப்பி அடிப்பர் என்பது, ‘ஆப்பரேஷன் விஜய்’ என பெயரிடப்பட்ட கார்கில் போரின் வாயிலாக, பாகிஸ்தானுக்கு மட்டுமின்றி இந்த உலகுக்கே உணர்த்தப்பட்டது.

நம் தேச நலனை பாதுகாப்பதில் நாங்கள் இன்றும் கடமைப்பட்டு உள்ளோம். நம் நாட்டின் மரியாதை மற்றும் கண்ணியத்தை பாதுகாக்க, எல்லை கட்டுப்பாடு கோட்டை தாண்டிச் செல்லவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

எங்களை தேவையின்றி துாண்டிவிட்டால், அவசியம் ஏற்பட்டால் எல்லை தாண்டுவோம்.

நாட்டில் போர் சூழல் உருவாகும் போதெல்லாம், நம் படையினருக்கு மக்கள் ஆதரவு அளித்து வந்துள்ளனர். ஆனால், அந்த ஆதரவு மறைமுகமானதாகவே இருந்துள்ளது.

தேவை ஏற்பட்டால், போர்க்களத்தில் நம் வீரர்களுக்கு நேரடியான ஆதரவை அளிக்க, பொதுமக்கள் மனதளவில் தயாராக இருக்க வேண்டும்.

இது தான் உக்ரைனில் நடந்து வருகிறது. உக்ரைன் – ரஷ்யா போரில் பொது மக்களும் களத்தில் இறங்கி சண்டையிட துவங்கியதால் தான், இந்த போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கார்கில் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களின் தியாகத்தை, இந்த நாடு என்றைக்கும் மறக்காது. நமக்கு முன்னால் இருக்கும் ஆபத்துகளும், சவால்களும் எதிர்காலத்தில் சிக்கலானதாக மாற வாய்ப்புள்ளது. இதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். எதிர்கால பாதுகாப்பு சவால்களை சமாளிக்க தேவையான தொழில்நுட்பம் சார்ந்த படையாக நம் ராணுவம் உருவாகி வருகிறது.

– மனோஜ் பாண்டே

ராணுவ தலைமை தளபதி

உத்வேகம் அளிக்கும் வெற்றி!

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், ‘கார்கில் வெற்றி தினம், நம் இணையற்ற வீரர்களின் துணிச்சலை நம் நாட்டு மக்களுக்கு உணர்த்தி, அவர்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிப்பதாக இருக்கும்’ என, தெரிவித்துள்ளார்.

வீரர்களுக்கு தலை வணங்குகிறேன்!

ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது:கார்கில் வெற்றி தினத்தை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், நம் ராணுவத்தினரின் அசாதாரண வீரத்தால் நாம் அடைந்த வெற்றியை, நாட்டு மக்கள் அனைவரும் நினைவு கூர்கின்றனர். நாட்டைக் காக்க உயிர் தியாகம் செய்து வெற்றிக்கு வழி வகுத்த வீரர்களுக்கு, இந்த தேசத்தின் சார்பில் வீர வணக்கம் செலுத்தி தலை வணங்குகிறேன். அவர்களின் வீர வரலாறு, வருங்கால சந்ததியினரை எப்போதும் ஊக்குவிக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.