நெல்லை மாவட்டம், நாட்டின் விடுதலைப் போராட்டத்துக்கு வித்திட்ட இடம் என்பதால் இங்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அதிகம் உள்ளன. அவற்றை கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், பாடநூல்களில் மட்டும் படித்து அறிவதைவிடவும் நேரில் சென்று அறிவது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்பதால் அவர்களுக்குப் பாரம்பர்ய நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

வரலாற்றுச் சின்னங்களையும், சிறப்பு வாய்ந்த இடங்களையும் அறிந்து கொள்ளும் வகையில், நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி மற்றும் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி மாணவிகள், இந்தப் பாரம்பர்ய நடைபயணத்தில் பங்கேற்றனர்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பாளையங்கோட்டையின் மேற்கு கோட்டை வாசலாகத் திகழ்ந்த இடம், அதன் பின்னர் காவல் நிலையமாகச் செயல்பட்டது. அதனால் மேடை காவல் நிலையம் என அழைக்கப்பட்ட அந்த இடத்தில் இருந்து நடைபயணம் தொடங்கியது.
பாளையங்கோட்டையின் பிரதான வீதிகள் வழியாகப் பயணமான மாணவிகள், மிகுந்த உற்சாகத்துடன் வரலாற்றுத் தேடலில் பங்கேற்றனர். எழுத்தாளர் நாறும்பூநாதன் இந்தப் பயணத்தைத் தொடங்கி வைத்தார்.

சைவம் வளர்த்ததில் முக்கியப் பங்காற்றிய நெல்லை சைவ சித்தாந்த சபைக்குச் சென்ற மாணவிகள், அங்கிருந்த சுவடிகள், பழங்காலத்தில் பதிப்பிக்கப்பட்ட அரிய நூல்களைப் பார்வையிட்டனர். பின்னர் நூற்றாண்டு மண்டபம் சென்ற மாணவிகளுக்கு பாளையங்கோட்டைக்கு கல்வி அளித்த கிறிஸ்துவ அமைப்பினரின் சேவை பற்றி விளக்கிக் கூறப்பட்டது.
இந்தக் குழுவினர் தெற்கு பஜாரில் உள்ள லூர்துநாதன் சிலையைப் பார்வையிட்டனர். சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பேராசிரியர் நஸர் அகமது, அந்தச் சிலை நிறுவப்பட்டது பற்றி விளக்கினார்.
கல்லூரி பேராசிரியர் ஒருவரை போலீஸார் தாக்கியதைக் கண்டித்து நடந்த போராட்டத்தின்போது நடந்த தடியடியில் அந்த மாணவர் தாமிரபரணி ஆற்றில் குதித்து உயிரிழந்ததை எடுத்துச் சொன்னதுடன், ஆசிரியர் – மாணவர் ஒற்றுமையின் சின்னமாக இப்போது வரை அந்த சிலை இருப்பதை உருக்கமாக விளக்கினார்.
சதக்கத்துல்லா கல்லூரி முதல்வர் அப்துல் காதர், ராணி அண்ணா கல்லூரி முதல்வர் மைதிலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி பேராசிரியர் நவநீத கிருஷ்ணன் உள்ளிட்டோரும் மாணவிகளுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் குறித்து விளக்கினார்கள்.

மக்கள் மாலை நேரங்களில் கூடும் பழைய கடையான ராம் லாலா ஸ்வீட்ஸ், ஜாமியா மசூதி, நெல்லையின் முதல் கிறிஸ்தவரான குளோரிந்தா பெயரில் உள்ள தேவாலயம், நெல்லை அரசு அருங்காட்சியகம் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.
இதில் பங்கேற்ற மாணவிகள் கூறுகையில், “நெல்லையின் வரலாற்றுச் சுவடுகளை அறிந்துகொள்வதற்கு இந்த பாரம்பர்ய நடைபயணம் உதவியாக இருந்தது. ஏட்டுப் படிப்பில் அறிவதை விடவும் நேரடியாக அந்த இடங்களுக்கே சென்று பார்வையிட்டது பயனுள்ளதாக இருந்தது. லூர்துநாதன் சிலையைப் பற்றி அறிந்துகொண்டது மறக்க முடியாத, உணர்வுபூர்வமான அனுபவம்” எனத் தெரிவித்தனர்.