அமெரிக்காவில் பசியால் வாடும் ஹைதராபாத் மாணவிக்கு உதவி: இந்திய தூதரகம் உறுதி

சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோ தெருக்களில் உடைமைகளை இழந்து, பசியோடு, மனநிலை பாதித்தவர் போல் ஹைதராபாத்தைச் சேர்ந்த சையிதா லுலூ என்ற மாணவி சுற்றி திரிந்தார். அவர் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது. இந்நிலையில், அவருக்கு தகுந்த உதவி வழங்கப்படும் என சிகாகோவில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

ஹைதராபாத் மவுலாலி பகுதியை சேர்ந்தவர் சையிதா ஹவாஜ் பாத்திமா. இவரது மகளான சையிதா லுலூ மின்ஹாஜ் குவைதி, எம்.எஸ். மேல் படிப்புக்காக கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் உள்ள சிகாகோவுக்கு சென்றார். அங்கிருந்து தினமும் தனது தாயிடம் செல்போனில் பேசி வந்துள்ளார். லுலூ கடந்த 2 மாதங்களாக தாயை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் கவலை அடைந்தார் பாத்திமா.

இந்நிலையில், சிகாகோ தெருக்களில் உடைமைகளை இழந்து, பசியோடு, மனநிலை பாதித்தவர் போல் லுலூ சுற்றி திரிகிறார் என்ற அதிர்ச்சி தகவலை இரண்டு இளைஞர்கள் மூலம் பாத்திமா அறிந்து கொண்டார். மகளின் உடைமைகளை யாரோ திருடி சென்றுவிட்டதால், அவர் மனநிலை பாதிக்கப்பட்டதை அறிந்து மிகவும் பதறிப்போனார் பாத்திமா. உடனடியாக மகளை ஹைதராபாத்துக்கு கொண்டு வர மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு கடிதம் எழுதினார். மேலும், தெலங்கானா அரசும் இதில் தலையிட்டு மகளை அமெரிக்காவிலிருந்து மீட்டு வர நடவடிக்கை மேற்கொள்ளும்படி முதல்வருக்கு விண்ணப்பித்துள்ளார்.

இந்திய துணை தூதரகம்: “சையிதா லுலூ மின்ஹாஜ் குவைதியின் நிலை குறித்த தகவல் தூதரகத்துக்கு கிடைத்துள்ளது. உள்ளூர் காவல் துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் துணையுடன் அவரை அடையாளம் காண்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அவருக்கு வேண்டிய மருத்துவ ரீதியான உதவி உட்பட அனைத்து உதவியும் வழங்கப்படும்” என பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு சிகாகோவில் அமைந்துள்ள இந்திய துணை தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில் ரஹ்மான் என்ற பிஆர்எஸ் கட்சியின் உறுப்பினர், லுலூவை சிகாகோவை சேர்ந்த முகரம் என்ற சமூக பணி செய்து வரும் நபர் அடையாளம் கண்டதாக தெரிவித்துள்ளார். மேலும், கடுமையான நிதிநிலை காரணமாக லுலூ மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அங்கு அவருக்கு வேலை கிடைக்காததுதான், அதற்கு காரணம் எனத் தெரிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் லுலூ சிகிச்சை பெற்ற நிலையில் அங்கிருந்து அவர் வெளியேறி உள்ளார். அவரை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.