நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுவே கூட்டத்தொடரை நடத்துவதற்கு பெரும் சிக்கலையும் ஏற்படுத்தி வருகிறது. ஏனெனில் இதுதொடர்பாக விவாதிக்க பாஜக அரசு போதிய அவகாசம் அளிப்பதில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
எதிர்க்கட்சிகள் கோரிக்கை
மேலும் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தொடர் கோரிக்கைகள் முன்வைத்து வருகின்றன. இதனால் கடும் அமளி, கோஷம், ஒத்திவைப்பு என 7வது நாளாக தொடர்கிறது. இன்றைய தினம் (ஜூலை 28) மாநிலங்களவையில் பேசிய திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரையன் ஆவேசமடைந்தார்.
ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்
இவர் பேசுகையில், விதி எண் 267ன் கீழ் மணிப்பூர் விவகாரம் குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. நான் மட்டுமல்ல காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமூல் காங்கிரஸ், திமுக என47 எம்.பிக்கள் நோட்டீஸ் அளித்துள்ளனர். நடப்பு அவையின் செயல்பாடுகளை ஒத்திவைத்து விட்டு மணிப்பூர் விஷயத்தை பேச வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
மத்திய அரசு அனுமதிக்கவில்லை
ஆனால் இதுவரை அனுமதிக்கப்பட வில்லை என்று பேசினார். இதற்கு பதிலளித்த அவைத் தலைவர் ஜகதீப் தன்கர், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே தெளிவாக தெரிவிக்கப்பட்டு விட்டது. குறுகிய நேரத்திற்கு மட்டும் விவாதிக்க அவை அனுமதி அளிக்கிறது. எனவே உறுப்பினர்கள் அவை மாண்பை குலைக்காமல் பேசலாம்.
டெரிக் ஓ பிரையன் அதிரடி
ஆனால் நீங்கள் அதற்கு உடன்பட மறுக்கிறீர்கள். உங்களின் செயல்பாடுகளை வெளியில் இருந்து பார்ப்பவர்கள் எப்படி புரிந்து கொள்வர். கொஞ்சம் நாகரிகம் வேண்டாமா? என்று கேள்வி எழுப்பினார். மீண்டும் பேசிய டெரிக் ஓ பிரையன், கூட்டத்தொடர் ஆரம்பித்ததில் இருந்து இந்த விஷயம் குறித்து பேச வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் எம்.பிக்கள் ஒத்திவைப்பு தீர்மானம் கோரி வருகிறோம்.
இன்று கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம்.. 4 ஆண்டுகளுக்கு முன்பே கணித்து சொன்ன மோடி!
அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் கோபம்
ஆனால் எதுவும் நடக்கவில்லை என்று மேஜையை தட்டி பேசினார். உடனே கோபமடைந்த அவைத் தலைவர் ஜகதீப் தன்கர், இந்த அவைக்கு மரியாதை கொடுங்கள். உங்கள் இருக்கைக்கு மரியாதை கொடுங்கள். இப்படி தட்டி பேசக் கூடாது. கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே பார்த்து கொண்டிருக்கிறேன்.
நாள் முழுவதும் ஒத்திவைப்பு
நீங்கள் ஒன்றும் நாடகமாட வேண்டாம் என்று கூறி அவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின்னர், வரும் திங்கள் அன்று மீண்டும் அவை கூடும் என்று ஜகதீன் தன்கர் தெரிவித்தார்.