நியூயார்க்: ட்விட்டர் (எக்ஸ்) சமூக வலைதளத்தில் டார்க் மோட் மட்டுமே இருக்கும் என அதன் உரிமையாளர் எலான் மஸ்க் ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார். இது ட்விட்டர் பயனர்களுக்கு அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கி இருந்தார். அது முதல் அந்த தளத்தில் பல்வேறு மாற்றங்களை தன் விருப்பத்துக்கு ஏற்ப மேற்கொண்டு வருகிறார். ஊழியர்களை பணி நீக்கம் செய்வது, ட்விட்டர் அலுவலக பொருட்கள் விற்பனை, தடை செய்யப்பட்டவர்களை மீண்டும் ட்விட்டர் தளத்தில் இயங்க அனுமதித்தது, அங்கீகரிக்கப்பட்ட பயனர்களிடத்தில் சந்தா கட்டணம் என அது நீள்கிறது. ட்விட்டருக்கு போட்டியாளர்கள் ஏராளமாக உருவானாலும் அதை கண்டும் காணாமல் மஸ்க் இந்த அதிரடியை தொடர்கிறார்.
அண்மையில் ட்விட்டரின் லோகோ மற்றும் பெயரை மாதிரி இருந்தார். தற்போது X என இந்த தளம் அறியப்பட்டு வருகிறது. “இந்த தளத்தில் வெகு விரைவில் டார்க் மோட் மட்டுமே இருக்கும்” என மஸ்க் ட்வீட் செய்திருந்தார். டிசைனர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மஸ்க் இப்படி பதில் தெரிவித்திருந்தார்.
ட்விட்டர் தளத்தில் தற்போது பயனர்கள் லைட் மற்றும் டார்க் மோடினை பயன்படுத்தலாம். இது தவிர டிம் மோடும் இதில் உள்ளது. மஸ்க் சொன்னது போல டார்க் மோட் மட்டும் ட்விட்டரில் இருந்தால் லைட் மற்றும் டிம் மோட் விடைபெறும். இது பயனர்கள் மத்தியில் கலவையான வரவேற்பை பெற்றுள்ளது.
This platform will soon only have “dark mode”. It is better in every way.
— Elon Musk (@elonmusk) July 27, 2023