Jailer: “சூப்பர் ஸ்டார் டைட்டில்… பயமா எனக்கா..?” ஜெயிலர் மேடையை தெறிக்க விட்ட ரஜினி!

சென்னை: ரஜினியின் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நேரு விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், ஜெயிலர் படத்தின் அனுபவம் குறித்து பேசினார்.

அப்போது அவர் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்த பயமெல்லாம் தனக்கு கிடையாது என அதிரடியாக பேசினார்.

மேலும், எனக்கு இரண்டு பேர் மீது மட்டுமே பயம் இருப்பதாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து ரஜினி ஓபன் : ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில், ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், செம்ம அதிரடியாக பஞ்ச் வைத்து மாஸ் காட்டினார்.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என கெத்தாக வலம் வருகிறார் ரஜினி. ஆனால், கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் பெரிதாக ஹிட் கொடுக்கவில்லை என்பதால், அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. மேலும், இனி அவர் சூப்பர் ஸ்டார் இல்லை என்றும், அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற விவாதமும் சூடு பிடித்தது.

இதற்காக நேரம் பார்த்து காத்திருந்த சில திரையுலக பிரபலங்கள், அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என கிளப்பி விட்டனர். மேலும், இப்போது அவரது படங்களுக்கு தான் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதாகவும், பாக்ஸ் ஆபிஸில் நல்ல ஓபனிங் உள்ளது எனவும் கூறி வந்தனர். இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயன் தான் வருங்கால சூப்பர் ஸ்டார் என புயலை கிளப்பினர்.

இதற்கெல்லாம் சேர்த்து ஜெயிலர் படத்தில் ‘ஹ்ம்க்கும்’, ‘ஜுஜுபி’ ஆகிய பாடல்களை களமிறக்கிவிட்டார் நெல்சன். இந்நிலையில், ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினியே சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து அவரது ஸ்டைலில் பேசி பஞ்ச் வைத்துள்ளார். அதாவது “எனது பெயருக்கு முன்னால் உள்ள சூப்பர் ஸ்டார் டைட்டிலை எடுத்துவிடும்படி பல ஆண்டுகளுக்கு முன்பே கூறினேன். அப்போது ரஜினி பயந்துவிட்டதாக சிலர் செய்திகளை பரப்பியதாகக்” கூறினார்.

தொடர்ந்து பேசிய ரஜினி, “நான் எதற்கும் பயப்படமாட்டேன், இறைவனுக்கும் நல்ல மனிதர்களுக்கும் மட்டுமே பயப்படுவேன். நல்ல மனிதர்களின் சாபம் நம்மை வீழ்த்திவிடும். அதனால் நல்ல மனிதர்களை நாம் புண்படுத்தக் கூடாது, ஆனால் அவர்களுக்கு பயப்பட வேண்டும்” எனக் கூறி ஜெயிலர் மேடையை தெறிக்கவிட்டார். இதன்மூலம் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து தனக்கு பயமே கிடையாது என ரஜினி பதிலடி கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அதேபோல், தயாரிப்பாளர் கலாநிதிமாறன் பேசியபோது, “ரஜினிக்குப் போட்டி ரஜினிதான்; ஆரம்பத்தில் இருந்து அவர் தான் சூப்பர் ஸ்டார். இந்த வயதிலும் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். தமிழ்நாட்டிற்கு மட்டும் அல்ல, இந்தியாவிலும் அவர் தான் சூப்பர் ஸ்டார்” எனக் கூறி ரசிகர்களை அலறவிட்டார். இதனை ரஜினி ரசிகர்கள் டிவிட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.