சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது.
இதனிடையே ஜெயிலர் படத்தில் இருந்து மூன்று பாடல்களை படக்குழு ஏற்கனவே வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் மற்ற பாடல்களும் தற்போது நடைபெற்ற ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் வெளியானது.
அனிருத் இசையில் உருவாகியுள்ள ஜெயிலர் ஆல்பம் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.
வெளியானது ஜெயிலர் பாடல்கள் : அண்ணாத்தைக்குப் பின்னர் ரஜினி நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. ரஜினியுடன் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தில் இருந்து காவாலா, ஹ்ம்க்கும், ஜுஜுபி ஆகிய பாடல்கள் வெளியாகிவிட்டன.
இதில் காவாலா, ஹ்ம்க்கும் பாடல்கள் தாறுமாறன் ஹிட் அடித்து ரசிகர்களிடம் அலப்பறையை கூட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெயிலர் படத்தின் மற்ற பாடல்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இதனையடுத்து இன்று (ஜூலை 28) ஜெயிலர் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பிரம்மாணடமாக நடைபெற்றது.
இதில் அனிருத்தின் இசை நிகழ்ச்சி, காவாலா பாடலுக்கு தமன்னாவின் லைவ் பெர்பாமன்ஸ் என ஆரம்பமே அதகளமாக தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஜெயிலர் படத்தின் பாடல்களை படக்குழு வெளியிட்டது. மொத்தமாக 8 ட்ராக்குகளுடன் வெளியாகியுள்ள ஜெயிலர் ஆல்பம், ரஜினி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக அமைந்துள்ளது. ஏற்கனவே வெளியான 3 பாடல்கள் தவிர, இன்னும் ஒரு பாடலும் 4 தீம் இசையும் இதில் இடம்பெற்றுள்ளது.
முக்கியமாக ‘ரத்தமாரே’ என்ற மெலடி பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். மற்றவை ஜெயிலர் தீம், முத்துவேல் பாண்டியன் தீம், ஜெயிலர் ட்ரில், அலப்பறை தீம் என்ற பெயர்களில் வெளியாகியுள்ளன. ரஜினிக்காக அனிருத் கொடுத்துள்ள பிஜிஎம் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களுக்கு செம்ம ஹைப் கொடுத்துள்ளது. இதனால் படத்திலும் அனிருத்தின் பின்னணி இசை மாஸ்ஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.