மலப்புரம்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது அவருக்கு முழங்கால் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கேரளாவில் புகழ்பெற்ற கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலையில் கடந்த 21-ம் தேதி ராகுல் காந்தி சிகிச்சைக்காக சேர்ந்தார். மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலரும் தலைமை மருத்துவருமான பி.எம்.வாரியர் அவரை வரவேற்றார். மருத்துவமனையில் ராகுல் காந்தி ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் நேற்று கூறும்போது, “முழங்கால் சிகிச்சைக்காக கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலையில் சேர்ந்த ராகுல் காந்தி வரும் ஞாயிற்றுக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்படலாம்” என்றார்.
ராகுல் காந்தி கடந்த புதன்கிழமை மருத்துவமனை அருகில் உள்ள விஸ்வம்பரா கோயிலுக்கு சென்று சுவாமியை வழிபட்டார். இதையடுத்து பிஎஸ்வி நாட்டிய சங்கம் நடத்திய கதகளி நடனத்தை கண்டுகளித்தார்.
ஆரிய வைத்தியசாலையில் சிகிச்சை எடுத்துவரும் பிரபல மலையாள எழுத்தாளரும் இயக்குநருமான எம்.டி.வாசுதேவன் நாயரையும் ராகுல் சந்தித்து பேசினார். அப்போது, ராகுல் காந்திக்கு வாசுதேவன் நாயர் ஒரு பேனாவை பரிசளித்தார்.