ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் ஒரு வாரமாக பெய்து வரும் கன மழையால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தில் இதுவரை 14 பேர் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
அவர்களில் 9 பேரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டு உள்ளன. கன மழையால் சுமார் 2 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. நூற்றுக்கணக்கான குடிசைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. இந்த குடிசைகளில் வசித்த மக்கள் வீடு, உடைமைகளை இழந்து பரிதவிக்கின்றனர். சுமார் 5.5 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, காய்கறி, பருத்தி ஆகிய பயிர்கள் நாசமாகி உள்ளனர். சுமார் 135 ஏரிகள் உடைந்து, பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல்வேறு இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், போலீஸார், ஊர்க் காவல்படையினர், தீயணைப்பு படையினருடன் பொதுமக்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 60 முக்கிய சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல சாலைகள் துண்டிக்கப்பட்டு வாகன போக்குவரத்து முடங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹைதராபாத் – விஜயவாடா இடையே பயணிகள் பேருந்து நேற்று முன் தினம் முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
சில பேருந்துகள் மாற்று பாதைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டன. ஆனால் அவை ஆங்காங்கே வெள்ளத்தில் சிக்கி நிற்கின்றன. காஜிபேட்டா உட்பட பல்வேறு ரயில் நிலையங்களிலும் மழை நீர் அதிகமாக தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக 5 ரயில்களை முழுவதுமாக ரத்து செய்தும், 4 ரயில்களை மாற்று பாதையில் செல்ல தென் மத்திய ரயில்வே துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
பொதுநல வழக்கு: மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக டாக்டர் சுதாகர் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், “தெலங்கானாவில் சுமார்ஒரு வாரமாக தொடர் மழை, வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மாநில அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை” என கூறியுள்ளார்.
இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
‘‘எத்தனை பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்? மாநில அரசு எடுத்த நடவடிக்கை என்ன? இதுவரை எத்தனை பேர் உயிரிழந்து உள்ளனர்? அவர்களுக்கு என்ன நிதி உதவி வழங்கப்பட்டது என்பன குறித்து வரும் 31-ம் தேதிக்குள் அரசு தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.