சென்னை: ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் மட்டுமின்றி ஏகப்பட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார், மலையாள திரையுலகின் நடிப்பு அசுரனான மோகன்லால், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப், டோலிவுட்டில் இருந்து சுனில் மற்றும் ஜகபதி பாபு, ரம்யா கிருஷ்ணன், தமன்னா மற்றும் யோகி பாபு என பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் முக்கிய வில்லனாக மலையாள நடிகர் விநாயகம் நடித்துள்ளார். முதலில் அந்த கதாபாத்திரத்திற்கு தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தனது நண்பருமான ஒரு நடிகரைத் தான் நடிக்க வைக்கலாமா என நெல்சன் யோசனை சொன்னார்.
மேலும், என்னையே அவரிடம் பேசவும் வைத்தார். நான் கேட்டதும், உடனடியாக அந்த நண்பர் ஓகே சொல்லி விட்டார் என ரஜினிகாந்த் பேசியதும் அவர் கமல்ஹாசன் தான் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
ஜெயிலரில் வில்லனாக கமல்: பிரபாஸின் கல்கி படத்தில் வில்லனாக கமிட் ஆகியுள்ள கமல்ஹாசன் ஜெயிலர் படத்தில் வில்லனாக நடிக்க இருந்தாரா? என்பதே பலருக்கும் ஆச்சர்யமாக உள்ளது.
ஜெயிலர் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசும் போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் தான் ஜெயிலர் படத்தில் வில்லனாக நடிக்க இருந்தார் எனக் கூறி ஹைப்பை எகிற விட்டுள்ளார்.
ஓகே சொல்லிட்டாரு: நெல்சன் என்கிட்ட அந்த ஐடியாவை சொல்லிட்டு, நீங்களே பேசிட்டா, நான் அப்புறம் ஃபாலோ பண்ணிக்கிறேன்னு சொன்னாரு, நானும் நண்பரிடம் போனில் பேசினேன். அதற்கு அவரும் உடனடியாக, நீங்க சொல்றீங்க நான் பண்றேன் என்றே ஓகே சொல்லி விட்டார்.
ஆனால், அதன் பின்னர் எனக்கு ஒரு யோசனை அவரு அந்த கேரக்டரில் நடித்தால், அவரை அடிப்பது போல காட்சிகள் இருக்குமே, அது சரியா வருமா? என யோசித்தேன். நெல்சனும் திடீரென கொஞ்சம் பேசுணும்னு சொன்னாரு, அவருக்கும் அதே சிந்தனையா இருந்துச்சு.. அதனால் என்ன பண்ணனும் என யோசித்தோம் கடைசியில் அப்படியொரு முடிவை எடுக்க வேண்டியதா போயிடுச்சு என்றார்.

விநாயகம் வில்லனா மாறிட்டாரு: இந்த விஷயத்தை அந்த நடிகரிடமே சொல்லும் போது, உங்களுக்கு எது தோணுதோ செய்யுங்கன்னு சொல்லிட்டாரு, கடைசியில் மலையாள நடிகர் விநாயகம் அந்த ரோல் பண்ணியிருக்காரு.. படம் வந்ததும் பாருங்க, அவருடைய கேரக்டர் எப்படி இருக்குன்னு மேடையில் ரஜினிகாந்த் பேசிய வீடியோக்கள் கசிந்துள்ள நிலையில், கமல்ஹாசனை தான் ரஜினிகாந்த் குறிப்பிட்டார் என ரசிகர்கள் பதிவுகளை போட்டு வருகின்றனர்.
ரஜினிகாந்த் கமல்ஹாசன் மீண்டும் திரையில் தோன்றி இருந்தால் வேறலெவல் பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவிக்குமே என்றும் இப்படி மிஸ் ஆகிடுச்சே என்றும் ஃபீல் செய்து வருகின்றனர்.