சென்னை:
“டிடிவி தினகரனை 420 என்றும், மாயமான் எனவும் கூறிய அதே ஓ.பன்னீர்செல்வம் தான் இன்றைக்கு அவர் காலில் விழுந்தும் அவருடன் இணைந்தும் போராட்டம் நடத்துகிறார்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி
சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஓபிஎஸ்ஸின் சொந்த ஊரான தேனியில் நடந்த போராட்டத்தில் அமமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரன் பங்கேற்றார். அதிமுகவை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றிவிட்ட நிலையில், அவருக்கு எதிராக ஓபிஎஸ் – டிடிவி தினகரன் – சசிகலா ஆகியோர் இணைந்துள்ளனர்.
கொடநாடு வழக்கில் எடப்பாடி பெயரும் அடிபடும் நிலையில், அவருக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே ஓபிஎஸ்ஸும், டிடிவி தினகரனும் இந்தப் போராட்டத்தை நடத்துகின்றனர். இந்நிலையில், இந்தப் போராட்டம் குறித்து அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது:
ஜெயலலிதா மரணம் அடைந்த போது அதில் சந்தேகம் இருப்பதாக கூறி, யாரை எதிர்த்து ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார்? இதே டிடிவி, சசிகலாவை எதிர்த்துதானே ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். அந்த யுத்தத்தையாவது அவர் முழுமைாக நடத்தினாரா? யாரை எதிர்த்து யுத்தம் நடத்தினாரோ அவர்களின் காலிலேயே போய் விழுந்தார். டிடிவி தினகரனை திரைமறைவில் சந்தித்து காலில் விழுந்தவர்தான் ஓபிஎஸ். இதில் இருந்தே அவர் எப்படிப்பட்ட சந்தர்ப்பவாதி என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.
டிடிவி தினகரனை 420 என்றும், மாயமான் எனவும் விமர்சித்தவர்தானே ஓபிஎஸ். அப்படியெல்லாம் விமர்சித்திவிட்டு, இன்று அவருடனே சேர்ந்து போராட்ட நாடகம் நடத்துகிறார் என்றால் அதை என்னவென்று சொல்வது. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.