247 மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் – மத்திய மந்திரி தகவல்

புதுடெல்லி,

மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி அஜய்குமார் மிஸ்ரா நேற்று மக்களவையில் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் கூறியதாவது:-

பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளிடம் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை அனுப்பப்பட்ட 247 சட்ட மசோதாக்களுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 24 மசோதாக்கள் குஜராத்தில் இருந்தும், 23 மசோதாக்கள் உத்தரபிரதேசத்தில் இருந்தும், 22 மசோதாக்கள் மராட்டியத்தில் இருந்தும் அனுப்பப்பட்டவை.

மேலும், 2014-2022-க்கு இடைப்பட்ட காலத்தில் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து 95 மசோதாக்கள் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு, பரிசீலனையில் இருக்கின்றன.

அவற்றில் உத்தரபிரதேசத்தில் இருந்து வந்த 11 மசோதாக்கள், மராட்டியத்தில் இருந்து வந்த 10, ஆந்திராவில் இருந்து வந்த 9 மசோதாக்களும் அடங்கும்.

இந்த 95 மசோதாக்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், துறைகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அவை எதுவும் கேள்விகள் எழுப்பினால், அதுகுறித்து குறிப்பிட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் இருந்து விளக்கம், கருத்து கேட்கப்படும். அதற்கு கால அவகாசம் தேவை என்பதால், மசோதாக்களுக்கான ஒப்புதலுக்கு குறிப்பிட்ட கால வரையறையை நிர்ணயிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.