இம்பால்: இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் ரிசர்வ் போலீஸ் படை கிடங்கில் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. 40 வாகனங்களில் வந்த 500 பேர் கொண்ட கும்பல் இந்த ஆயுதக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது.
மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தின் நரன்செய்னா பகுதியில் அமைந்துள்ளது ‘இந்திய ரிசர்வ் பட்டாலியன் முகாம்’ ( Indian Reserve Battalion – IRB). இந்த முகாமுக்கு வியாழக்கிழமை மாலை வந்த கும்பல் ஒன்று, ஆயுதங்களைக் களவாடியுள்ளது. இது தொடர்பாக மொய்ராங் காவல் நிலையத்தில், ஐஆர்பி 2-வது பட்டாலியன் தலைவர் ஓ.பிரேமானந்தா சிங் புகார் அளித்துள்ளார். வாயிலில் இருந்த காவலர்களை தாக்கிவிட்டு ஆயுதங்களை அந்தக் கும்பல் கைப்பற்றிச் சென்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 320 ரவுண்ட் தோட்டாக்கள், 20 கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தியும் அந்தக் கும்பலைக் கட்டுப்படுத்த இயலவில்லை என ரிசர்வ் போலீஸ் படை தெரிவித்துள்ளது.
களவாடப்பட்ட ஆயுதங்களின் விவரம்: ரைஃபில் துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், துப்பாக்கி மேகசின்கள், சிறிய பீரங்கி குண்டுகள், டெட்டனேட்டர்கள், கையறி குண்டுகள், வெடிகுண்டுகள், சிறிய ரக மெஷின் கன் வகையறா துப்பாக்கிகள், கார்பைன்கள், 19,000 ரவுண்ட் தோட்டாக்கள் ஆகியன களவாடப்பட்டுள்ளன என போலீஸில் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏகே சீரிஸ் ரைஃபில் ஒன்று, இன்சாஸ் ரைபில்கள் 25, கட்டக் ரைஃபில்கள் 4, இன்சாஸ் எல்எம்ஜி ரைஃபில்கள் 5, MP-5 ரைபில்கள் 5, கையெறி குண்டுகள் 124, எஸ்எம்சி கார்பைன்கள் 21, எஸ்எல்ஆர் ரக துப்பாக்கிகள் 195, 9 எம்எம் பிஸ்டல்கள் 16 மற்றும் 134 டெட்டனேட்டர்கள், 23 ஜிஎஃப் ரைஃபில்கள், 51 எம்எம் HE வெடிகுண்டுகள் 81 ஆகியன காணாமல் போனதாக புள்ளிவிவரத்தையும் ரிசர்வ் போலீஸ் தெரிவித்துள்ளது.
கடந்த மே 3-ஆம் தேதி தொடங்கி காவல் நிலையங்கள், ஆயுதக் கிடங்குகள் எனப் பல இடங்களில் இனக் குழுக்கள் 4000 ஆயுதங்கள், 5 லட்சம் துப்பாக்கி தோட்டாக்களை சூறையாடி கைப்பற்றிச் சென்றுள்ளன. மணிப்பூரில் மைத்தேயி – குகி ஸோ இனக்கலவரத்தில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 50 ஆயிரம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர். இதுவரை களவாடப்பட்ட ஆயுதங்களில் வெறும் 1000 ஆயுதங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.
மணிப்பூர் கலவரம் தொடங்கியதில் இருந்து இதுவரை பல முறை முதல்வர் பைரன் சிங், காவல் துறை உயரதிகாரிகள் உள்பட பலரும் கைப்பற்றிச் சென்ற ஆயுதங்களை மீண்டும் ஒப்படைக்குமாறு வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, மணிப்பூரின் விஷ்ணுபூர் மாவட்டத்தில் நேற்று பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் 17 பேர் காயம் அடைந்தனர். கலவரத்தில் உயிரிழந்த 35 பேரின் உடல்களை ஓரே இடத்தில் அடக்கம் செய்யும் முடிவு உயர் நீதிமன்ற உத்தரவு காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. | வாசிக்க > மணிப்பூரில் நடந்த புதிய மோதலில் 17 பேர் காயம்: உயிரிழந்த 35 பேரை ஒரே இடத்தில் அடக்கம் செய்யும் முடிவு தள்ளிவைப்பு
மணிப்பூரில் மைத்தேயி இனத்தவர்கள் பழங்குடியினர் அந்தஸ்து கோருகின்றனர். இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் கடந்த மே 3-ம் தேதி இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வரும் கலவரத்தில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.