இஸ்லாமியர்கள் குறித்த சீமானின் கருத்து ஆபத்தானது.. சங் பரிவாரங்களுக்கு துணை போகிறார்.. திருமாவளன் அட்டாக்

சென்னை:
இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சிறுபான்மையினர் இல்லை என்று

பேசியது பெரும் சர்ச்சையாகி இருக்கும் நிலையில், இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். மேலும், சீமானின் பேச்சு எவ்வாறு சங் பரிவாரங்களின் கருத்துகளோடு ஒத்துப்போகிறது என்பதையும் அவர் விளக்கியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் சமீபகால பேச்சுகள் பெரிய அளவில் சர்ச்சையாகி வருகின்றன. மணிப்பூர் கலவரத்தை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் பேசிய அவர், இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் சாத்தானின் பிள்ளைகள் என்று கூறினார்.

இது தமிழகம் முழுவதும் முஸ்லிம், கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சீமானின் இந்தக் கருத்துக்கு பல அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த சூழலில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “இஸ்லாமியர்கள், கிறிஸ்தவரகள் சிறுபான்மையினர் அல்ல. அவர்கள் மொழி அடிப்படையில் பெரும்பான்மையினர். இனி யாராவது அவர்களை சிறுபான்மையினர் என்று கூறினால் செருப்பால் அடிப்பேன்” எனப் பேசி மேலும் சர்ச்சையில் சிக்கினார்.

இந்நிலையில், சீமானின் இந்தக் கருத்து தொடர்பாக விசிக தலைவர் தொல். திருமாவளவனிடம் நிருபர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

மதத்தின் பெயரால் முஸ்லிம்களை அந்நியப்படுத்தும் முயற்சியில் சங் பரிவாரங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு எதிரான வன்மறை வெறியாட்டங்களை சங் பரிவாரங்கள் பல மாநிலங்களில் நிகழ்த்தி வருகிறார்கள். இவ்வாறு மதத்தின் பெயரால் முஸ்லிம்கள் வேட்டையாடப்படும் சூழ்நிலையில், அவர்கள் மத அடையாளத்தை உதறிவிட்டு மொழி அடையாளத்தை ஏற்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே சீமான் போன்ற சங் பரிவாரங்களுக்கு துணைபோகும் நபர்கள் பேசி வருவது அதிர்ச்சி அளிக்கிறது.

சங் பரிவாரங்கள் என்ன வெறுப்பு பிரச்சாரத்தை செய்கிறார்களோ, அதையே சீமான் போன்றவர்கள் வேறு பெயரில் பரப்பி வருகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. வட இந்திய மாநிலங்களை போல தமிழ்நாட்டையும் மாற்ற இவர்கள் திட்டமிடுகிறார்களோ என்ற அச்சம் எழுகிறது. மொழி உணர்வு, இன உணர்வு வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது. அதே சமயத்தில், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என்ற உணர்வே அவர்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு தரக்கூடியது. அந்த உணர்வை சிதைக்க வேண்டும் என்பதுதான் சங் பரிவாரங்களின் நோக்கம்.

முஸ்லிம் என்கிற உணர்வின் அடிப்படையில் தான் அவர்கள் இந்தியா முழுவதும் கணிசமாக ஒருங்கிணைந்து நிற்கிறார்கள். எனவே, மாநிலவாரியாக மொழி அடிப்படையில் அவர்களின் ஒற்றுமையை குலைக்க வேண்டும்.. அவர்களை சிதறடிக்க வேண்டும் என்பதே சங் பரிவாரங்கள் மற்றும் பாஜகவின் நோக்கம். அதே கருத்தை சீமான் போன்றவர்கள் பேசுவது சமூக அமைதிக்கும், சமூக நல்லிணக்கத்துக்கும் ஆபத்தானது. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.