திருமலை: திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று தொலைபேசி மூலம் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது:
தங்கும் அறைக்கான டெபாசிட் பணம் இனி சுலபமாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக சிடி (கேஷ் டெபாசிட்) டிராக்கிங் சிஸ்டம் கொண்டு வரப்படும். இதனால் 3 முதல் 5 நாட்களுக்குள் பக்தர்களுக்கு அவர்கள் செலுத்திய டெபாசிட் பணம் திரும்ப வந்து சேர்ந்து விடும்.
வரும் 25-ம் தேதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்பட உள்ளது. மேலும், அன்று தாயார் தங்க ரதத்தில் வீதி உலா வர உள்ளார். வெளி மாநில பக்தர்களும் ஸ்ரீவாரி சேவகர்களாக சேவை புரிய ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் முறை விரிவாக்கம் செய்யப்படும். இவ்வாறு தர்மா ரெட்டி கூறினார்.
கடந்த ஜூலை மாதம் ஏழுமலையான் கோயில் உண்டியலில் பக்தர்கள் ரூ.129.08 கோடி காணிக்கை செலுத்தி இருந்தனர். இந்த மாதத்தில் மட்டும் 23.23 லட்சம் பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். 56.68 லட்சம் பக்தர்களுக்கு இலவச அன்னதானம் செய்யப்பட்டு 9.74 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.