பெரியகுளம்: “பாஜகவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி ஏதாவது பேசினால் மட்டும் நான் பதிலளிக்கிறேன்” என்று பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், பாஜக – அதிமுக கூட்டணி குறித்தும், அண்ணாமலை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கருத்து தெரிவிப்பது குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “பாஜகவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி ஏதாவது பேசினால் மட்டும் நான் பதிலளிக்கிறேன். நான் இதை இன்றைக்கு அல்ல, பலமுறை சொல்லியிருக்கிறேன். அதிமுகவின் தலைவர் எடப்பாடி பழனிசாமி. எனவே, அவர் ஏதாவது கூறினால், ஏனென்றால் அவர்தான் டெல்லிக்கு சென்றார். அப்போது அவர் மட்டும் டெல்லிக்குச் செல்லவில்லை. சிலர், நாங்கள் டெல்லிக்குச் சென்றோம், பிரதமர் மோடி அருகில் அமர்ந்திருந்தோம். அதனால், நாங்கள் மோடி, அமித் ஷா, நட்டா இவர்கள் சொன்னால்தான் கேட்போம் என்று கூறுகின்றனர்.
அப்படியில்லை, அன்றைக்கு அண்ணாமலையும் அவர்களுடன் இருந்தார். அதிமுகவுடன் கூட்டணி என்பதை ஏற்கனவே அறிவித்தாகிவிட்டது. இடையில், திருமணங்களில், தாலி கட்டும் நேரம் வரைகூட, ஏதாவது பிரச்சினை வருகிறது. அதற்காக திருமணம் நடக்காமல் போய்விடுகிறதா? அவர்கள் குடும்பம் நடத்தாமல் போய்விடுகின்றனரா? அதுபோலத்தான். எனவே, அதிமுக – பாஜக கூட்டணி நன்றாக உள்ளது. எந்த பிரச்சினையும் இல்லாமல் சிறப்பாகவே செல்கிறது” என்று அவர் கூறினார்.