மும்பை, கல்யான் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வர் ஷேக். இவரது சகோதரி டிட்வாலா என்ற இடத்தைச் சேர்ந்த சபாஷ் ஷேக் (25) என்ற வாலிபருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார். இதன் மூலம் அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருந்தது. ஈஸ்வர் ஷேக் தனது சகோதரி சபாஷ் ஷேக்குடன் உறவில் இருப்பதை விரும்பவில்லை. அதோடு சபாஷ் ஷேக்கும் அவருடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்த பெண்ணும் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்வது வழக்கம். இந்நிலையில் திடீரென சபாஷ் ஷேக் அவரது வீட்டிற்கு இரண்டு நாட்களாக வரவில்லை. உடனே அவரது தந்தை இது குறித்து போலீஸில் செய்தார்.

சபாஷ் ஷேக்கிற்கும், அவருடன் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தும் பெண்ணின் வீட்டில் உள்ளவர்களுக்கும் ஏற்கெனவே பிரச்னை இருப்பதையும் போலீஸில் சபாஷ் ஷேக் தந்தை தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் போலீஸார் ஈஸ்வர் ஷேக் மற்றும் அவரது சகோதரர் சோஹப் ஆகியோரை பிடித்து சென்று விசாரித்த போது அவர்கள் இரண்டு பேரும் மற்றொரு நண்பருடன் சேர்ந்து சபாஷ் ஷேக்கை கடத்திச் சென்று, தலையில் சுத்தியலால் அடித்துக் கொலைசெய்து ஆற்றில் தூக்கிப்போட்டுவிட்டதாக தெரிவித்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சம்பவத்தன்று சபாஷ் ஷேக்கிற்கும் அவருடன் திருமணம் செய்யாமல் வாழும் பெண்ணிற்கும் இடையே வீட்டில் சண்டை ஏற்பட்டுள்ளது. கோபத்தில் சபாஷ் ஷேக் ஒரு குழந்தையை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியில் வந்தார். அந்த நேரம் அப்பெண்ணின் சகோதரர்கள் இரண்டு பேர் மற்றும் அவர்களின் நண்பர் அங்கு வந்தனர்.
அவர்கள் சபாஷ் ஷேக்கிடமிருந்து குழந்தையை பிடுங்கி தங்களது சகோதரியிடம் கொடுத்தனர். அதோடு சபாஷ் ஷேக்கை ஆட்டோ ஒன்றில் கடத்திச் சென்றனர். உடனே சபாஷ் ஷேக்குடன் வாழும் பெண் இது குறித்து சபாஷ் ஷேக் பெற்றோருக்கு போன் செய்து அவரை கடத்திச் செல்வதாக தெரிவித்தார். தனது சகோதரியை சபாஷ் ஷேக் மோசமாக நடத்துவது மற்றும் அவரிடம் அடிக்கடி சண்டை போடுவது ஈஸ்வர் ஷேக்கிற்கு பிடிக்கவில்லை.

எனவே சபாஷ் ஷேக்கிற்கு தக்கப் பாடம் கற்றுக்கொடுக்க முடிவு செய்தனர்.
எனவேதான் தங்களது திட்டத்திற்கு தங்கள் நண்பர் ஒருவரையும் அழைத்துக்கொண்டு சபாஷ் ஷேக்கை கடத்திச் சென்று கொலைசெய்துள்ளனர். சபாஷ் ஷேக் உடல் இன்னும் ஆற்றில் இருந்து மீட்கப்படவில்லை.