பாகிஸ்தானில் பயங்கர ரயில் விபத்து.. 19 பேர் உடல் நசுங்கி பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்..

இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் இன்று நடந்த பயங்கர ரயில் விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே, இந்த ரயில் விபத்து தீவிரவாத சதியாக இருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஹவேலியன் நகருக்கு ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு புறப்பட்டது. 500-க்கும் மேற்பட்ட பயணிகள் அதில் இருந்தனர்.

இந்நிலையில், சிந்த் மாணாத்தில் உள்ள சஹாரா ரயில் நிலையம் அருகே ரயில் இன்று மாலை வந்து கொண்டிருந்த போது, திடீரென பயங்கர சத்தத்துடன் தடம் புரண்டு தரையில் ஓடியது. இதனை பார்த்த பயணிகள் அலறினர். பின்னர் அங்கிருந்த இரும்பு பாலத்தின் மீது மோதிய அந்த ரயிலின் 8 பெட்டிகள் அங்குமிங்குமாக சிதறி கவிழ்ந்தன.

தீவிர மீட்புப் பணி:
இந்த சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து, ரயில் பெட்டிகளுக்குள் சிக்கியவர்களை மீட்க முயன்றனர். ஆனால், பெட்டிகள் நசுங்கியும், தலைகீழாகவும் இருந்ததால் அவர்களால் மீட்க முடியவில்லை. பின்னர் தகவவறிந்த போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் அங்கு வந்து மீட்புப் படையில் ஈடுபட்டனர்.

19 பேர் பலி:
இதில் 19 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னும் 200-க்கும் மேற்பட்டோர் ரயலில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது ஒருபுறம் இருக்க, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோரில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பலர் ரயில் பெட்டிகளுக்குள் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தீவிரவாதிகளின் செயலா?
இந்நிலையில், இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஷேபாஸ் ஷரீப் இரங்கல் தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்த விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் காஜா சாட் ரஃபீக், “இது மிகப்பெரிய ரயில் விபத்து. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து நிகழ்ந்ததா அல்லது தீவிரவாதிகளின் சதி வேலை காரணமா என விசாரணை நடைபெற்று வருகிறது” எனக் கூறியுள்ளார்.

எலான் மஸ்க் – மார்க் ஜுக்கர்பெர்க் இடையே நடக்கும் நிஜ சண்டை.. வெல்லப்போவது யார்?

பாகிஸ்தான் தலிபான்கள்:
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “இந்த ரயில் விபத்தினை பார்க்கும் போது தீவிரவாதிகளின் சதியாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்” என்றார். குறிப்பாக, இந்த ரயில் பக்துன்க்வா மாகாணம் செல்வதால் இந்த சந்தேகம் அதிக அளவில் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த மாகாணத்தில் தெஹ்ரிக் இ தலிபான்களின் (பாகிஸ்தான் தலிபான்கள்) ஆதிக்கம் அதிகம் இருப்பதால் அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பயங்கரம்..! பாகிஸ்தானில் அரசியல் மாநாட்டில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு.. 40 பேர் உடல் சிதறி பலி

அடுத்தடுத்து பயங்கரம்:
பாகிஸ்தானுக்கு இது மிகவும் வேதனையான காலம் என்றே தெரிகிறது. ஒருபக்கம், பொருளாதார வீழ்ச்சியால் வறுமை அந்த நாட்டை சூழ்ந்து வருகிறது. மறுபுறம், தீவிரவாதிகள் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் பல கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். கடந்த 8 மாதங்களில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட பயங்கர வெடிகுண்டு தாக்குதல்கள் பாகிஸ்தானில் அரங்கேறி இருக்கின்றன. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கடந்த வாரம் கூட பாகிஸ்தானில் நடந்த அரசியல் கூட்டத்தில் குண்டு வெடித்து 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலான சம்பவங்களை பாகிஸ்தான் தலிபான்கள் அரங்கேற்றியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.