மீண்டும் நடையை கட்டிய அண்ணாமலை: போகிற போக்கில் தமிழக அரசுக்கும் எதிர்ப்பு!

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாடு முழுவதும் மக்களை சந்தித்து பாஜகவுக்கு ஆதரவு கோரும் விதமாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஜூலை 28ஆம் தேதி என் மண் என் மக்கள் என்ற பாதை யாத்திரையை தொடங்கினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதை தொடங்கி வைத்தார். பாஜகவினர் மட்டுமல்லாமல் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இராமேஸ்வரத்தில் தொடங்கப்பட்ட பாதை யாத்திரை ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய ஊர்களை முடித்து மதுரை வந்தார். மதுரையில் ஞாயிற்றுக் கிழமையுடன் பாதை யாத்திரைக்கு இரண்டு நாள்கள் விடுமுறை விட்டார். தமிழ்நாடு முழுவதும் ஆறு மாத காலத்துக்குள் சுற்றி வர வேண்டும் என்பதால் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் மட்டும் பாதை யாத்திரையாகவும், மக்கள் இல்லாத சாலைகளில் சொகுசு பேருந்திலுமாக அண்ணாமலை தனது பயணத்தை வடிவமைத்துள்ளார்.

இரண்டு நாள்கள் ஓய்வு எடுத்துக் கொண்ட நிலையில் டெல்லியிலிருந்து அழைப்பு வந்ததால் அண்ணாமலை டெல்லி செல்வதாக தகவல் வெளியானது. ஆனால் வழக்கமான ஓய்வு தான் டெல்லி செல்லவில்லை என்று பாஜக தரப்பில் கூறப்பட்டது.

திமுக யாத்திரைக்கு பெயர் வைத்த அண்ணாமலை!

இந்நிலையில் இன்று அண்ணாமலை தனது நடை பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் நடை பயணம் தொடங்கப்பட்டது.

விருதுநகர் பாஜக அலுவலகத்தின் முன்பு அமைக்கப்பட்ட பாரத மாதா சிலையை அனுமதி பெறாமல் நிறுவியதால் வருவாய்த்துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் அதை அகற்றினர். இதற்கு பாஜக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அண்ணாமலை கருப்பு பேட்ஜ் அணிந்து நடை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

சிவகாசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய ஊர்கள் வழியாக நடை பயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை முதற்கட்ட நடைபயணத்தை ஆகஸ்ட் 22ஆம் தேதி திருநெல்வேலியில் நிறைவு செய்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.