சென்னை: தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காக ரூ.94.51 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விருதுநகர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், அரியலூர், நாகப்பட்டினம் ஆகிய 11 மாவட்டங்களில் ரூ.4,080 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டன.
சமூக தொற்று மருத்துவம்: அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பல்வேறு துறைகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களைக் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. அந்த வகையில், நோய்க் குறியியல், நுண்உயிரியல், மருந்தியல், தடயவியல் மருத்துவம், சமூக தொற்று மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி சில முக்கிய மருத்துவ உபகரணங்களை நிறுவுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒரு மருத்துவமனைக்கு ரூ.8.59 கோடி வீதம் 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ரூ.94.51 கோடி மதிப்பீட்டில் உபகரணங்கள் வாங்க மாநில மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் சார்பில் சுகாதாரத் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
அதனைப் பரிசீலித்து, மாநில மருத்துவப் பணிகள் கழகம் மூலமாக அந்த உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கு சுகாதாரத் துறை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான அரசாணையை தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ளார்.