நாங்குநேரி சாதியக் கொடுமை; “வன்கொடுமைப் பகுதியாக அறிவித்து, பாதுகாப்பளிக்க வேண்டும்!" – திருமாவளவன்

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன் சின்னதுரை. வள்ளியூர் அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் வகுப்புத் தோழர்கள் சிலரால் சின்னதுரை சாதிரீதியிலான கேலி கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். இதனால் பள்ளிக்குச் செல்வதையும் தவிர்த்திருக்கிறார். ஆசிரியர்கள், சின்னதுரையிடம் விசாரித்ததில், நடந்த விவரங்களைத் தெரிவித்திருக்கிறார். ஆசிரியர்களும் சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்துக் கண்டித்திருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட சிறுவன்

இதனால் ஆத்திரமடைந்த மாணவக் குழு ஒன்று சின்னதுரையின் வீட்டுக்குள் இரவு 10:30 மணியளவில் புகுந்து, சின்னதுரையையும், அவரின் தங்கையையும் சரமாரியாக வெட்டியிருக்கிறது. அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் அவர்களை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து நாங்குநேரி காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் விரைவாகச் சம்பவ இடத்துக்கு வரவில்லை என்று தெரிகிறது.

இதைக் கண்டித்துப் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, காவல்துறை வழக்கு பதிவுசெய்து 3 மாணவர்கள் உட்பட 6 பேரைக் கைதுசெய்திருக்கிறது.

இந்தச் சம்பவம் தற்போது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாங்குநேரி பெருந்தெரு ஆதிதிராவிடர் குடியிருப்புக்குள் ஆயுதங்களோடு புகுந்து, 12-ம் வகுப்பு மாணவன் சின்னதுரை மற்றும் அவனது தமக்கை சந்திரா தேவி ஆகியோர்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள், சின்னதுரையுடன் படிக்கும் மாணவர்கள்தான் என்பது, இளந்தலைமுறையினர் எவ்வாறு இங்கே வளர்க்கப்படுகின்றனர் என்பதை உணர்த்துகிறது.

திருமாவளவன்

சாதிவெறி பிடித்த அமைப்புகள் இத்தகைய நஞ்சை இளம் பிஞ்சுகளின் நெஞ்சில் விதைத்து வருவதுதான் இதற்கு முதன்மை காரணமாகும். சாதிப்பெருமை, மதப்பெருமை என்னும் பெயரில் தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராகப் பரப்பப்படும் வெறுப்பு அரசியலே காரணம். சாதிய வாதம், மதவாதம், இனவாதம் ஆகியவற்றின் ஊற்றுக்கண்ணாயிருக்கும் சங்பரிவார்கள் இத்தகைய சமூக முரண்களைக் கூர்மைப்படுத்துவதில் தீவிரமாக உள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மாணவர்களின் கைகளில் சாதி அடையாள கயிறுகளைக் கட்டுவது, சைக்கிள்கள்- இருசக்கர வண்டிகளில் சாதி அடையாள முத்திரைகளை வரைவது அல்லது ஒட்டுவது போன்ற நடவடிக்கைகளைச் சாதிய – மதவெறி அமைப்புகள் மாணவர்களிடையே திணிப்பதும் நடக்கிறது. அரசு இவற்றையெல்லாம் கண்காணித்து மாணவச் சமூகத்தைப் பாதுகாத்திட வேண்டும். சின்னதுரை குடும்பத்திற்குப் பாதுகாப்பளிக்க வேண்டும். வேறு பள்ளியில் சின்னதுரை கல்வித் தொடர அரசு ஆவண செய்ய வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும் இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ளனரா என ஆய்வுசெய்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.  அந்தப் பகுதியை வன்கொடுமைப் பகுதியாக அறிவித்து, சட்டப்பூர்வமான பாதுகாப்பை அளிக்க வேண்டும்” என வலியுறுத்தியிருக்கிறார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.