இந்தியாவில் இருந்து தமிழ்நாடு பிரிகிறதா..? "எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது".. சீமான் ஓபன் டாக்

சென்னை:
“இந்தியாவில் இருந்து தமிழ்நாடு பிரியவில்லை.. நீங்கள்தான் பிதுக்கி தள்ளுகிறீர்கள்” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்

ஆவேசமாக கூறினார்.

மணிப்பூர் கலவரம் தொடர்பாக மத்திய அரசு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர், இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை சிலர் பிரிக்க பார்க்கிறார்கள் என்றும், தமிழ்நாட்டில் பாரதத் தாயை வழிபட முடியாத சூழல் நிலவுகிறது எனவும் பேசியிருந்தார். பிரதமரின் இந்தப் பேச்சு ஒருவித சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பிரதமரின் பேச்சு குறித்து சீமானிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

கலவரத்தின் காவலர்கள்:
மணிப்பூர் கலவரம் தொடர்பாக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தால் நீங்கள் (மோடி) எதை பற்றி பேசுகிறீர்கள். அவரது உரையில் ஒரு இடத்திலாவது மணிப்பூர் கலவரம் பற்றி பேசினாரா? அவர்கள் கலவரம் குறித்து பேச மாட்டார்கள். ஏனென்றால் கலவரத்தின் காவலர்கள் அவர்கள். கலவரங்கள் மூலமாகவே கட்சியை வளர்த்து ஆட்சியை பிடிப்பவர்கள் அவரகள். அதனால் அவர்கள் கலவரத்தை பற்றி பேச மாட்டார்கள்.

சிலை வைத்தது ஏன்?
மணிப்பூர் பிரச்சினையை பற்றி பேசுனு சொன்னா, என்னென்னவோ பேசிட்டு இருக்காரு. காந்தியின் பெயரை சொல்ல காங்கிரஸுக்கு தகுதி இல்லைனு சொல்றாரு. அதுக்கும், மணிப்பூர் கலவரத்துக்கும் என்ன சம்மதம் இருக்கிறது? சரி, இதை சொல்ல உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? இந்தியாவின் அடையாளமே காந்தி, நேரு, அம்பேத்கர்தான். யாராவது இந்தியாவின் அடையாளம் வல்லபபாய் படேல் என சொல்வார்களா.. அப்படி இருக்கும் போது எதுக்கு நீங்க வல்லபபாய் படேலுக்கு சிலை வைத்தீர்கள்? ஆர்எஸ்எஸ் மீதான தடையை நீக்கியதற்கு நன்றிக்கடனாக அவருக்கு சிலை வைத்திருக்கிறீர்கள். அதுதானே உண்மை.

எந்த கொம்பனும் தடுக்க முடியாது:
காமராஜர், எம்ஜிஆர் வாழ்ந்த தமிழ்நாட்டை பிரிக்க பார்க்கிறார்கள் என மோடி பேசியிருக்கிறார். பிரிக்கிறதை விடுங்க.. எங்களுக்கு பிதுக்கி தள்ளுறது யாரு? ஊர் ஊரா போய் தமிழ் சிறந்த மொழி; தொன்மையான மொழி எனப் பேச வேண்டியது. ஆனால் நாடாளுமன்ற வாசலில் சமஸ்கிருதத்துக்கு கல்வெட்டு வைக்க வேண்டியது. கச்சத் தீவை மீட்க வக்கு இல்ல. காவிரி நீரை எங்களுக்கு பெற்றுத் தர முடியல. எங்களை வெறும் வாக்குக்கும், வரிக்கும் மட்டும் பயன்படுத்துறீங்க. நல்லா கேட்டுக்கோங்க.. பல மொழி என சொன்னால் இந்தியா இருக்கும்; ஒரே மொழி என சொன்னீங்கனா பல நாடுகள் பிறக்கும். இதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது. இவ்வாறு சீமான் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.