ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்திலுள்ள போத்திரெட்டி பாளையத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர், மனைவி சசிகலா மற்றும் 6 வயதான மகள் லக்ஷிதா ஆகியோருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நேற்றிரவு புறப்பட்டுவந்தார். இரவு 7.30 மணியளவில், அலிபிரி நடைபாதை வழியாகச் சென்றனர். இரவு 11 மணியளவில், நரசிம்மசாமி கோயிலை அடைந்தனர். அப்போது, உடன் வந்த மகள் லக்ஷிதா திடீரென மாயமானதைக் கண்டு, பெற்றோர் அதிர்ந்துபோயினர். பக்தர்கள் கூட்டத்தில் நீண்ட நேரமாக தேடியும், மகளை கண்டுபிடிக்க முடியாததால், போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீஸார், மலைப் பாதையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வுக்குஉட்படுத்தி, சிறுமியை தேடும் பணியிலும் ஈடுபட்டனர்.

இன்று காலை 7 மணியளவில், கொடிய காட்டு மிருகத்தால் கடித்து குதறப்பட்ட நிலையில் சிறுமி உடல் அடர்ந்த வனப் பகுதிக்குள் கிடந்தது. குழந்தையின் சடலத்தைப் பார்த்து, பெற்றோர் கதறி அழுதனர். முதற்கட்ட விசாரணையில், ‘சிறுத்தை இழுத்துசென்று சிறுமியை தாக்கிக் கொன்றிருக்கலாம்’ என்று போலீஸார் தகவல் தெரிவித்தனர். ஆனால், நிகழ்விடத்தைப் பார்வையிட்ட வனத்துறை அதிகாரிகள், ‘சிறுத்தை தாக்க வாய்ப்பில்லை; கரடி தாக்கி சிறுமி இறந்திருக்கலாம்’ என்று கூறியிருக்கிறார்கள். காரணம், அலிபிரி நடைபாதையிலுள்ள மான் பூங்கா அருகே கடந்த வாரம் கரடியின் நடமாட்டம் இருந்ததாக வனத்துறை அதிகாரிகள் சொல்கிறார்கள்.
எனினும், பிரேத பரிசோதனை முடிவில் சிறுமி எந்த மிருகம் தாக்கியதில், உயிரிழந்தார் என்பது தெளிவாக தெரிந்துவிடும் என்பதால், சிறுமியின் உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. திருப்பதி மலைப்பாதையில், காட்டு மிருகங்கள் தாக்குவது, இது முதல் முறைக் கிடையாது. ஏற்கெனவே, பக்தர்கள் பலர் சிறுத்தைகளாலும், கரடிகளாலும் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அலிபிரி நடைப்பாதை, அடர்ந்த வனப்பகுதி என்பதால் வனவிலங்குகள் அடிக்கடி நடைப்பாதைக்கு வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று பாய்ந்துவந்து தாக்கியதில், காவலர் ஒருவரும், பக்தரும் படுகாயமடைந்தனர்.

கடந்த ஜூன் 23-ம் தேதி, குடும்பத்தினருடன் நடைபாதையில் சென்ற கௌசிக் என்ற 5 வயது சிறுவனை, ஏழாவது மைல்கல் பகுதியில் சிறுத்தை ஒன்று தாக்கியது. சிறுவனின் கழுத்தை கவ்விப் பிடித்து, காட்டுக்குள்ளும் ஓடியது. பக்தர்கள் கற்களை வீசி, கூச்சல் போட்டதால் சிறுவனை விட்டுவிட்டு சிறுத்தை ஓடிவிட்டது. இதில், அந்தச் சிறுவன் பலத்த காயமடைந்தான். மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்ட பின்னரே சிறுவன் குணமடைந்து வீடு திரும்பினான். இந்த நிலையில், சிறுத்தையோ, கரடியோ ஏதோ ஒரு கொடிய மிருகம் தாக்கியதில் 6 வயது சிறுமி உயிரிழந்தது, பக்தர்களிடையே கடும் பீதி ஏற்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதால், பக்தர்களுக்கான உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தேவஸ்தானம் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்திருக்கிறது.