புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று நிறைவு பெற்றது. கடைசி நாளான நேற்று மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். மாநிலங்களவையில் ஆம் ஆத்மி எம்பி ராகவ் சத்தா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கடந்த ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. முதல் நாளில் இருந்தே மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டன. இதன் காரணமாக நாடாளுமன்ற அலுவல்கள் முடங்கின. எனினும் 21 முக்கிய மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியது.
இந்த சூழலில் மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்று மக்களவை கூடியதும், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக பகல் 12 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இதன்பிறகு எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியை சேர்ந்த எம்பிக்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர். நாடாளுமன்ற வளாகத்தில் அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து அம்பேத்கர் சிலை வரை கண்டன பேரணி நடத்தப்பட்டது.
பகல் 12.30 மணிக்கு மக்களவை கூடியபோது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஐபிசி, சிஆர்பிசி, ஐஇசி ஆகிய குற்றவியல் சட்டங்களை மறுசீரமைக்கும் 3 புதிய மசோதாக்களை தாக்கல் செய்தார். பின்னர் மக்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையில் அமளி: மாநிலங்களவை நேற்று காலை கூடியதும் மக்களவையில் இருந்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தை எதிர்க்கட்சி எம்பிக்கள் எழுப்பி அமளியில்ஈடுபட்டனர். அப்போது அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறும்போது, “கடைசி நாளிலாவது அவையை நடத்த ஒத்துழைப்பு தாருங்கள்’’ என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் டெல்லி சேவை மசோதா தொடர்பான விவாதத்தின்போது 5 எம்பிக்களின் பெயர்களில் ஆம் ஆத்மி எம்பி ராகவ் சத்தா போலியாக கையெழுத்திட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் காரணமாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நாடாளுமன்ற உரிமைக் குழு விசாரணைக்குப் பிறகே அவர்மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்தார்.
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ராகவ் சத்தா சஸ்பெண்ட் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இறுதியில் பிற்பகல் 2.48 மணிக்கு மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது.