புதுடெல்லி: நியூஸ்கிளிக் செய்தி இணையதளத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு முன்னாள் நீதிபதிகள், தூதர்கள் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்டோர் கடிதம் எழுதியுள்ளனர்.
கடந்த 2021-ம் ஆண்டில் நியூஸ்கிளிக் செய்தி வலைதளத்துக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். அந்த நிறுவனத்தின் சொத்துகள் முடக்கப்பட்டன.
இந்நிலையில், கடந்த வாரம் அமெரிக்க நாளிதழான ‘தி நியூயார்க் டைம்ஸ்’, இந்தியாவில் செயல்பட்டு வரும் நியூஸ் கிளிக் நிறுவனத்துக்கு சீனாவிடமிருந்து நிதி வருகிறது என்று செய்தி வெளியிட்டது. சீனாவுக்கு ஆதரவாக செய்திகளை நியூஸ் கிளிக் வெளியிடுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறை நியூஸ்கிளிக் நிறுவனம் மீதான தனது நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து, இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. இந்நிலையில், அந்தசெய்தி வலைதளத்துக்கு எதிராகநடவடிக்கை எடுக்கக்கோரி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோருக்கு தெலங்கானா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.தர் ராவ், உள்துறை அமைச்சகத்தின் முன்னாள் செயலர் எல்.சி.கோயல், முன்னாள் தூதர்கள் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்டோர் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.
அவர்கள் எழுதியுள்ள கடிதத் தில் கூறியுள்ளதாவது: நியூஸ் கிளிக் நிறுவனத்துக்கு வரும் நிதி இந்தியாவுக்கு எதிரான சதித் திட்டம் குறித்து முழுமையாக ஆராயும் வகையில் உயர்நிலை விசாரணையை மேற்கொள்ள மத்தியஅரசுக்கு உத்தரவிட வேண்டும். நியூஸ்கிளிக் செய்தி வலைதளத்தில் வெளியான ரஃபேல் போர் விமானம் குறித்த செய்திகளும் எதிர்க்கட்சிகள் நிலைப்பாடும் முற்றிலுமாகப் பொருந்திப்போகும் நிலையில், இவை தற்செயலான நிகழ்வு அல்ல என்பது தெளி வாகிறது.
வெளிநாடுகளின் தூண்டுதலின்பேரில், நாட்டின் ஜனநாயக நடைமுறைகளில் தலையிட்டு, தவறான தகவல்களைப் பரப்பும் இதுபோன்ற சக்திகளை நாம் ஒடுக்க வேண்டும்.
சீனாவுக்கு ஆதரவு: இந்தியாவில் உள்ள அந்தச் செய்தி நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக பணியாற்றி வருவது கவலையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது. கரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியா குறித்து தவறான தோற்றத்தை உருவாக்க முயன்றது சீனாவின் புகழைக் காப்பாற்றுவதற்கு இணையானது. எனவே, அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.