லாரி ஷெட் உரிமையாளர் வெடிகுண்டு வீசி கொலை| Lorry shed owner bombed and killed

லாரி ஷெட் உரிமையாளர் வெடிகுண்டு வீசி கொலை

துாத்துக்குடி,: துாத்துக்குடியில், ஏற்கனவே நடந்த கொலைகளுக்கு பழிக்குப்பழியாக லாரி ஷெட் உரிமையாளர் சக்திவேல் வெடிகுண்டு வீசி, வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

துாத்துக்குடி சங்கரப்பேரி சாலையில் சோழன் லாரி புக்கிங் ஆபீஸ் நடத்தியவர் சக்திவேல், 50. நேற்று அவர் அலுவலகத்தில் இருந்தபோது, மாலை 5:00 மணிக்கு, நான்கு பேர் கும்பல், அவரது அலுவலகத்தில் நுழைந்து, அவர் மீது வெடிகுண்டு வீசினர்.

இதில், தப்பி ஓட முயன்ற அவர் மீது, மேலும் ஒரு வெடிகுண்டை வீசி, சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.

சங்கரப்பேரியை சேர்ந்தவர் அங்குசாமி, 48, லாரி டிரைவர். இவர், 2017 ஆக.,14ல் ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார்.

இவரது கொலைக்கு பழிவாங்க அவர்கள் மகன் உத்தண்டு தலைமையில் ஒரு கும்பல், கொலையாளிகளை தேடி வந்தது.

அங்குசாமி கொலையில் முக்கிய குற்றவாளியான சங்கரப்பேரி கருப்பசாமி, 35, என்பவர் கடந்த ஜனவரி 28ல் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

எனவே நேற்று கருப்பசாமியின் ஆதரவாளர்கள் சக்திவேலை கொலை செய்திருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர். ‘சிப்காட்’ போலீசார், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

பழிக்கு பழி சம்பவங்களில் வெடிகுண்டு வீசி நடந்த கொலையால், துாத்துக்குடியில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.

வாரிசு சான்றிதழுக்கு ரூ.8,000 லஞ்சம் பெற்ற ஆர்.ஐ., கைது

ஒட்டன்சத்திரம்,: காவேரியம்மாபட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து என்பவர் வாரிசு சான்றிதழ் வாங்குவதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தார். சான்றிதழ் வழங்க ஒட்டன்சத்திரம் வருவாய் ஆய்வாளர் பாண்டியன், 8,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.

இதுகுறித்து, திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கூறினார்.

அவர்களின் ஆலோசனைப்படி மாரிமுத்து, நேற்று மதியம் 1:00 மணிக்கு வருவாய் ஆய்வாளர் அலுவலகம் சென்று பாண்டியனிடம், 8,000 ரூபாயை கொடுத்தார்.

அந்த பணத்தை வாங்கிய பாண்டியனை, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் துருவி துருவி விசாரித்தனர்.

அவரது சொந்த ஊரான வேடசந்துார் அருகே சேணன்கோட்டையில் உள்ள அவரின் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்த உள்ளனர்.

தம்பியை கொன்ற அண்ணன் சொத்து தகராறில் பயங்கரம்

கொண்டரசன்பாளையம் : திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த கொண்டரசன்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் பழனிசாமி, 65, ஈஸ்வரமூர்த்தி, 60; சகோதரர்கள். இருவரிடையே சொத்து பிரிப்பதில் தகராறு இருந்தது. நேற்று அதிகாலை, ஈஸ்வரமூர்த்தி தன் வீடு முன் பால் கறந்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த பழனிசாமி, தகராறு செய்தார். பால் ஊற்றுவதற்காக, இருசக்கர வாகனத்தில் ஈஸ்வரமூர்த்தி புறப்பட்டார்.

latest tamil news

கொண்டரசன்பாளையம், அம்மன் கோவில் அருகே ஈஸ்வரமூர்த்தி இருசக்கர வாகனத்தில் சென்ற போது, பின்தொடர்ந்து வந்த பழனிசாமி மீண்டும் தகராறு செய்தார்; அரிவாளால், ஈஸ்வரமூர்த்தியை சரமாரியாக வெட்டினார். அவரது சத்தம் கேட்டு, மனைவி முத்துலட்சுமி ஓடி வந்தார். அவரிடம் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். ரத்த வெள்ளத்தில் சரிந்த ஈஸ்வரமூர்த்தி இறந்தார். தலைமறைவான பழனிசாமியை தாராபுரம் போலீசார் கைது செய்தனர்.

சிறுமி பலாத்காரம் தொழிலாளிக்கு ’20 ஆண்டு’

பெங்களூரு : சிறுமியை பலாத்காரம் செய்த, தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை விதித்து, சிறப்பு விரைவு நீதிமன்றம்தீர்ப்பு கூறியுள்ளது.

பெங்களூரு சிங்கசந்திராவில் வசித்தவர் உமாகாந்த் பெகேரா, 42; கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. சிறிய கூடாரம் அமைத்து வசித்தார். இந்நிலையில், 2022 ஏப்ரல் 28ம் தேதி, கூடாரத்தின் முன் விளையாடிய, 6 வயது சிறுமியிடம், நைசாக பேச்சு கொடுத்தார். சாக்லேட் தருவதாக கூடாரத்திற்குள் அழைத்து சென்று பலாத்காரம் செய்தார்.

சிறுமியின் தாய் அளித்த புகாரில், உமாகாந்தை பரப்பன அக்ரஹாரா போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி இஸ்ராத் ஜஹான் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார். உமாகாந்திற்கு, 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, 20,000 ரூபாய் அபராதம் விதித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.