பாலக்காடு:கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பட்டாம்பியை சேர்ந்தவர் பைசல், 46.
இவர், தன் விலை உயர்ந்த ‘மான்ட்பிளாங்க்’ பேனாவை, போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், 52, திருடியதாக, முதல்வர் பினராயி விஜயனுக்கு புகார் அளித்தனர்.
இதை பரிசீலனை செய்த முதல்வர், பாலக்காடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் பேனா திருடியது உறுதியானது.
குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:கடந்த ஜூன் மாதம் புகார்தாரர் பைசலை, குண்டர் சட்டத்தில், திருத்தல போலீசார் கைது செய்தனர்.
சிறையில் அடைத்த போது, அவரிடம் உள்ள பொருட்களை கைப்பற்றிய இன்ஸ்பெக்டர் விஜயகுமார், 60,000 ரூபாய் மதிப்புள்ள மான்ட்பிளாங்க் பேனாவை எடுத்துக் கொண்டு, மற்ற பொருட்களை பதிவு செய்தார்.
மூன்று மாத சிறை தண்டனை முடிந்து வெளியில் வந்த பைசலிடம் பேனாவை தவிர, மற்ற பொருட்களை போலீசார் ஒப்படைத்தனர். அப்போது இந்த விவகாரத்தை அவர் அம்பலப்படுத்தினார்.
இவ்வாறு கூறினர்.
இதையடுத்து, இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க, டி.ஜி.பி.,க்கு பரிந்துரைத்துள்ளதாக, மாவட்ட எஸ்.பி., ஆனந்த் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement