பாகல்கோட்:பாகல்கோட் டவுனில் அனுமதியின்றி நிறுவப்பட்ட, வீர சிவாஜி சிலையை அகற்றியதால் போராட்டம் நடத்திய, ஹிந்து அமைப்பினர், 20 பேர் கைது செய்யப்பட்டனர். இன்று இரவு 12:00 மணி வரை, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாகல்கோட் டவுன், சோனாரா படவானேயில் கடந்த சில தினங்களுக்கு முன், ஹிந்து அமைப்பினர் வீர சிவாஜி சிலை நிறுவினர். ஆனால், சிலை நிறுவ மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறவில்லை. இதனால், அந்த சிலையை அகற்ற நகராட்சி அதிகாரிகளுக்கு, பாகல்கோட் கலெக்டர் ஜானகி நேற்று முன்தினம் காலை உத்தரவிட்டார்.
சிலையை அகற்ற ஹிந்து அமைப்பு, பா.ஜ.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் நேற்று முன்தினம் நள்ளிரவு ஜே.சி.பி., இயந்திரம் மூலம், வீர சிவாஜி சிலை அகற்றப்பட்டது. டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றி, சிலையை வேறு இடத்திற்கு கொண்டு சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஹிந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த எஸ்.பி., ஜெயபிரகாஷ் சமாதானம் பேச முயன்றார்.
ஆனால், போராட்டக்காரர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நிலைமை கை மீறி செல்வதை உணர்ந்த எஸ்.பி., போராட்டத்தில் ஈடுபட்டோரை, கைது செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட, 20 பேரை போலீசார் கைது செய்து, வேனில் ஏற்றி சென்றனர். நேற்று காலை அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
அசம்பாவித சம்பவங்களை தடுக்க நேற்று காலை 6:00 மணியில் இருந்து, இன்று நள்ளிரவு 12:00 மணி வரை, 144 தடை உத்தரவு பிறப்பித்து, கலெக்டர் ஜானகி உத்தரவிட்டார்.
சிலை நிறுவப்பட்டு இருந்த இடத்தில் 100 க்கும் மேற்பட்ட, போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். சிலையை சுற்றியுள்ள பகுதிகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement