புனே: அமலாக்கத்துறையின் விசாரணைக்கு அஞ்சி தான் அஜித் பவார் அணியினர் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியும், பாஜக.வும் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் (என்சிபி) சேர்ந்த எம்எல்ஏ.க்களுடன் அந்த கூட்டணியில் இணைந்தார் அஜித் பவார். அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
“மகாராஷ்டிரா மாநில நலனுக்காக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக நமது கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் சொல்லி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் அமலாக்கத்துறை துறையின் விசாரணைக்கு அஞ்சியே அங்கு சென்றுள்ளனர்.
‘நீங்கள் எங்கள் பக்கம் இருந்தால் அனைத்தும் நலம். இல்லையென்றால் நீங்கள் வேறு இடத்தில் இருக்க வேண்டி இருக்கும்’ என அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு அஞ்சி அவர்கள் அங்கு சென்றுள்ளனர். மறுபக்கம் குற்றம் செய்யாதவர்கள் அவர்களுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் நாட்டின் முக்கிய இடத்தில் உள்ள நபர் ஒருவர், அதிகாரத்தை தனித்துவமான முறையில் துஷ்பிரயோகம் செய்து வருகிறார். அவர் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை. தனது அலுவலகத்தில் சுமார் 200 டிவி திரையில் செய்தி தொலைக்காட்சி நிறுவனங்களை உன்னிப்பாக கவனிக்க சிலரை பணி அமர்த்தியுள்ளார். அதில் அரசுக்கு எதிராக செய்திகள் வந்தால், அந்த தொலைக்காட்சியின் தலைமை நிர்வாகியை தொடர்பு கொண்டு அதை நீக்குமாறு முக்கிய அதிகாரி மூலம் மிரட்டல் விடுக்கிறார்” என தெரிவித்தார்.