சென்னை, –
சர்வதேச அலைச்சறுக்கு போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்தது. அலையில் சாகசம் நிகழ்த்தி புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்த ஜப்பானின் டென்ஷி இவாமி ஆண்கள் பிரிவிலும், ஜப்பானின் சாரா வகிடா பெண்கள் பிரிவிலும் கோப்பையை வென்றனர்.
வெற்றியை ஈட்டிய அவர்களுக்கு சமூக வலைதள பதிவின் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘உலக அலைச்சறுக்கு லீக் அமைப்பின் தொடரை முதல் முறையாக இந்தியாவில் நடத்திக் காட்டியுள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பெரு முயற்சியை பாராட்டுகிறேன். செஸ் ஒலிம்பியாட், சென்னை ஓபன் பெண்கள் டென்னிஸ், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடர்களை தொடர்ந்து மேலும் ஒரு மகுடமாக இது அமைந்துள்ளது.
இதனால் நமது தமிழ்நாடு பெருமிதம் கொள்கிறது. உலக அலைச்சறுக்கு வரைபடத்தில் தமிழ்நாட்டை இடம் பெறச் செய்யும் முயற்சியில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னகர்வு’ என்றும் அதில் கூறியுள்ளார்.