திருநெல்வேலி: “நீதிபதி சந்துரு ஆணையத்தை நாங்குநேரி பிரச்சினையோடு மட்டும் சுருக்கிக் கொள்ளாமல், தமிழக அளவில் கல்வி நிறுவன வளாகங்களில் நடைபெறுகின்ற திட்டமிட்டு பரப்பப்படுகிற சாதிய மதவாத வெறுப்பு அரசியல் குறித்து விரிவாக ஆய்வு செய்து தமிழக அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். எனவே, அவரது தலைமையிலான ஆணையத்தின் ஆய்வுக் களத்தை விரிவுப்படுத்த வேண்டும்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அவரது மணி மண்டபத்தில், உள்ள உருவச்சிலைக்கு விசிக தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “தமிழக முதல்வர் ஸ்டாலின், நாங்குநேரி வன்கொடுமை குறித்து ஆய்வு செய்வதற்கு நீதிபதி சந்துரு தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்திருக்கிறார். அதனை விசிக வரவேற்கிறது.
அதேவேளையில், அந்த ஆணையத்தை நாங்குநேரி பிரச்சினையோடு மட்டும் சுருக்கிக் கொள்ளாமல், தமிழக அளவில் கல்வி நிறுவன வளாகங்களில் நடைபெறுகின்ற திட்டமிட்டு பரப்பப்படுகிற சாதிய, மதவாத வெறுப்பு அரசியல் குறித்து விரிவாக ஆய்வு செய்து தமிழக அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். எனவே, நீதிபதி சந்துரு தலைமையிலான ஆணையத்தின் ஆய்வுக் களத்தை தமிழக அரசு விரிவுப்படுத்த வேண்டும்.
மணிப்பூரிலே நடந்திருக்கிற வன்முறை வெறியாட்டம் குறித்து இதுவரையில் உரிய விளக்கத்தை அளிக்காத பிரதமர், மணிப்பூரைப் போலவே எல்லா மாநிலங்களிலும் மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தி, அரசியல் ஆதாயம் தேடுவது அவர்களின் நோக்கமாக இருக்கிறது. வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தப்போவது பெரும்பான்மை இந்து மக்களே என்று சங்பரிவார்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.