மகளிர் உரிமைத் தொகை.. அதிமுக மாநாட்டில் முக்கிய தீர்மானம்.. ஆரவாரம் செய்யும் பெண்கள்!

மதுரை:
திமுக அரசு செயல்படுத்தவுள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக முக்கிய தீர்மானம் ஒன்று அதிமுக மதுரை மாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மேலும், இந்த அறிவிப்புக்காக எடப்பாடி பழனிசாமிக்கு பெண்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

மதுரையில் அதிமுக மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. தென் மாவட்ட மக்களுக்கு, குறிப்பாக முக்குலத்தோர் சமூகத்தினருக்கு எதிராக

செயல்பட்டு வருகிறார் என ஓபிஎஸ் தரப்பு குற்றம்சாட்டி வரும் நிலையில், அதை பொய்யாக்கும் விதமாக மறவர்களின் கோட்டையான மதுரையில் பெரிய அளவில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது.

காலை முதலாக நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், மக்களும் கலந்துகொண்டுள்ளனர். காலையில் அதிமுக தலைவர்கள் அனைவரும் விழா மேடைக்கு வந்த நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் கூட்டத்தில் மிதந்தபடி மாலை 5 மணியளவில் மேடை ஏறினார்.

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட 32 தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டன. அதில் முதல் அறிவிப்பே மகளிர் உரிமைத் தொகை தொடர்பானதாக இருந்தது. அதாவது, தற்போது திமுக அரசு செயல்படுத்தி வரும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத் தலைவிகள் மட்டுமே பயன்பெற முடியும். இந்நிலையில், அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகையான ரூ.1000-ஐ வழங்க வேண்டும் என அதிமுக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் வாசிக்கப்படும் போது அங்கிருந்த பெண்கள் கைதட்டியும், கோஷங்கள் எழுப்பியும் ஆரவாரம் செய்தனர். இதுதவிர, திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்; தமிழகத்தில் இயங்கும் அனைத்து கல்வி நிலையங்களிலும் தமிழை கட்டாய பாடமாக மாற்ற வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், புதுச்சேரியை மாநிலமாக அறிவிக்க வேண்டும்; கச்சத் தீவை மீட்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து நடத்த தமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்; விவசாயிகளின் நிலத்தை பறிக்கும் என்எல்சி நிறுவனத்தின் முயற்சிக்கு துணை நிற்கும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதேபோல, உயர்கல்வியின் தரத்தை குறைக்கும் வகையில் பொதுப்பாடத் திட்டத்தை கொண்டு வர முயற்சிக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காவிரி – குண்டாறு நதி இணைப்பு திட்டத்தை கிடப்பில் போட்டுள்ள திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், வழக்குகளை கண்டு திமுக அமைச்சர்களை போல ஓடி ஒளியாமல் எத்தனை பொய் வழக்குகளை போட்டாலும் சட்ட ரீதியாக சந்திப்போம் எனவும் அதிமுக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதேபோல, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வகுத்து தரும் யுக்திகளின் அடிப்படையில் தேர்தலை சந்தித்து அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.