புதுடெல்லி: மாநிலங்களவையில் தற்போதுள்ள 225 எம்.பி.க்களில், 12 சதவீதம் பேர் கோடீஸ்வரர்களாக இருப்பதாகவும், 33 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளதாகவும் ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக சீர்திருத்த சங்கம்(ஏடிஆர்) மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு(என்இடபிள்யூ) என்ற அமைப்பு ஆகியவை இணைந்து மாநிலங்களவை எம்.பி.க்களின் பின்னணி விவரங்களை ஆராய்ந்தது. அது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநிலங்களவையில் தற்போதுள்ள 225 எம்.பி.க்களில் 12 சதவீதம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
இந்த பட்டியலில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்த எம்.பி.க்கள் அதிகம் உள்ளனர். ஆந்திராவைச் சேர்ந்த 11 மாநிலங்களவை எம்.பி.க்களில் 5 பேரும், தெலங்கானாவில் உள்ள 7 மாநிலங்களவை எம்.பி.க்களில் 3 பேரும், மகாராஷ்டிராவில் உள்ள 19 எம்.பி.க்களில் 3 பேரும், டெல்லியில் 3 எம்.பி.க்களில் ஒருவரும், பஞ்சாப்பில் உள்ள 7 எம்.பி.க்களில் இருவரும், ஹரியாணாவில் உள்ள 5 எம்.பி.க்களில் ஒருவரும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள 11 எம்.பி.க்களில் 2 பேரும் கோடீஸ்வரர்கள். இவர்களின் ஒட்டுமொத்த சொத்த மதிப்பு ரூ.100 கோடிக்கு மேல் உள்ளது. தெலங்கானாவை சேர்ந்த 7 எம்.பி.க்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.5,596 கோடி. ஆந்திராவைச் சேர்ந்த 11 எம்.பி.க்களின் சொத்து மதிப்பு ரூ.3,823கோடி. உ.பி.யைச் சேர்ந்த 30 எம்.பி.க்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1.941 கோடி.
மாநிலங்களவை எம்.பி.க்கள் 225 பேரில் 75 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. 41 எம்.பி.க்கள் மீது கடுமையான குற்றங்கள் உள்ளன. இருவர் மீது கொலை வழக்குகள் உள்ளன. 4 எம்.பி.க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன. இவர்களில் காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு உள்ளது. பாஜகவை சேர்ந்த 85 மாநிலங்களவை எம்.பி.க்களில் 23 பேர் மீதும், காங்கிரஸ் எம்.பி.க்கள் 30 பேரில் 12 பேர் மீதும், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 13 எம்.பி.க்களில் 4 பேர் மீதும், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த 6 எம்.பி.க்களில் 5 பேர் மீதும், மார்க்சிஸ்ட் எம்.பி.க்கள் 5 பேரில் 4 பேர் மீதும், ஆம்ஆத்மி எம்.பி.க்கள் 10 பேரில் 3 பேர் மீதும், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 எம்.பி.க்களில் 2 பேர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளதாக அவர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.