மதுரை: விசாரணை கைதிகளின் பற்கள் உடைக்கப்பட்ட விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை குழுவின் அறிக்கையை கேட்டு தாக்கலான மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “அம்பாசமுத்திரம் போலீஸார் என் மீது பொய் வழக்கு பதிவு செய்து சட்டவிரோத காவலில் வைத்து கடுமையாக தாக்கினர். அப்போது எனது நான்கு பற்கள் உடைக்கப்பட்டன. என்னைப் போல் வேறு சில விசாரணை கைதிகளின் பற்களையும் டிஎஸ்பி பல்வீர்சிங் பிடுங்கி சித்திரவதை செய்துள்ளார்.
இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸார் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், அம்பை காவல் நிலைய மார்ச் 10-ம் தேதி கேமரா பதிவுகளை வழங்கவும், எனது பற்கள் உடைக்கப்பட்டதற்கு இழப்பீடு வழங்கவும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய ஐஏஎஸ் அதிகாரி அமுதா மற்றும் நெல்லை சார் ஆட்சியரின் அறிக்கைகளை எனக்கு வழங்கவும் உத்தரவிட வேண்டும்” இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி டி.நாகர்ஜூன் இன்று விசாரித்து, மனுதாரரின் கோரிக்கை குறித்து அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆக. 29க்கு ஒத்திவைத்தார்.