குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்று வரும் ஜி20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரேயஸ், உரையின் தொடக்கத்தில், ஜி20 உச்சி மாநாட்டை நடத்துவதில் இந்தியா அளித்த விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்தார்.

WHO இயக்குனரின் பாராட்டு மழை!
உலகளாவிய சுகாதாரக் காப்பீடு திட்டமும், உலகின் மிகப்பெரிய சுகாதார முன்முயற்சியுமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை முன்னேற்றுவதில் இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்தார் டெட்ரோஸ். “நான், காந்திநகரில் உள்ள சுகாதார மருத்துவ மையத்திற்குச் சென்றேன். அங்கு, ஆயிரம் வீடுகளுக்கு வழங்கப்படும் ஆரம்ப சுகாதாரச் சேவைகளால் ஈர்க்கப்பட்டேன். இந்தியாவில் வழங்கப்படும் டெலிமெடிசின் சேவைகளுக்கு உள்நாட்டில் மருந்துவக்காப்பீடு அட்டைகள் சிறந்த சிகிச்சையை வழங்குகின்றன. இது வரும் காலங்களில் சுகாதாரத்தை மாற்றியமைப்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். மேலும், உலகளாவிய டிஜிட்டல் ஹெல்த் முன்முயற்சியில் தலைமை தாங்கியதற்காக இந்தியாவின் ஜி20 தலைமைக்கு நன்றி” என்று கூறினார்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் வெகுவாகப் பாராட்டிய, பிரதம மந்திரியின் மருந்துவக் காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத், 2018-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கம், 50 கோடிக்கும் மேற்பட்ட ஏழைக்குடும்பங்களுக்கு இலவச மருத்துவச் சேவையை வழங்குவது. இத்திட்டம், மருத்துவ உதவி தேவைப்படும், காப்பீடு செய்யப்பட்ட ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை நிதியுதவி அளிக்கிறது. இந்த திட்டத்தின் மூலம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் கூட மக்கள் பயன்பெறலாம்.

காப்பீடு திட்டத்தில் ஓட்டைகள்?
இந்நிலையில், மிகப்பெரிய மருத்துவக் காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் பாரத் தொடர்பாக மத்திய தலைமை கணக்கு தணிக்கைக்குழு (Comptroller and Auditor General – CAG) வெளியிட்டிருக்கும் அறிக்கையின் மூலம், அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது.
ஆகஸ்ட் 1-ம் தேதி நிலவரப்படி மொத்தம் 24.33 கோடி ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு அட்டைகள் உருவாக்கப்பட்டிருக்கும் சூழலில், இந்தக் காப்பீடு திட்டத்தில், 7.5 லட்சம் பயனாளிகளின் பதிவு, ஒரே செல்போன் எண்ணுடன் இணைக்கப்பட்டு, மோசடி நடைபெற்றுள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழு ஆதாருடன் 4,761 பதிவுகள் இணைக்கப்பட்டுள்ளன.
மத்தியப்பிரதேசத்தில் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெற்ற பின்னர் இறந்ததாகக் காட்டப்பட்ட 403 பேருக்கு, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், அரசிடமிருந்து ரூ.1.1 கோடி வழங்கப்பட்டிருப்பதாகவும் சி.ஏ.ஜி. அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி, பொது சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மருத்துவ சேவைகளின் பட்டியலில் இல்லாத மருத்துவமனைகளின் செயல்பாடுகள், தணிக்கை அறிக்கையில் கண்டறியப்பட்டிருக்கின்றன. இதன் மூலம், பல மருத்துவமனைகள் அரசாங்கத்திடமிருந்து பணம் பெற, இத்தகைய போலி எண்களைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய காப்பீடு திட்டம் என்ற புகழ்ச்சியுரை ஒருபுறம் இருக்க, நிதியை தவறாகப் பயன்படுத்துதல், போலி கணக்குகள், முறையான ஆதாரங்கள் இல்லாமல் நிதியை விடுவித்தல் என, இத்திட்டத்தில் உள்ள பல ஓட்டைகள் சி.ஏ.ஜி. அறிக்கை மூலம் தற்போது தெரிய வந்துள்ளது.
ஏழை, எளிய மக்களின் மருத்துவத் தேவைகள் கருதி உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டத்தில், தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, அதில் உள்ள குறைபாடுகளை சரி செய்தால் மட்டுமே, இத்திட்டம் உண்மையில் ஏழைப் பயனாளிகளுக்கு பலனளிக்கும்.