எய்ட்ஸ் இருப்பதாக கூறி கொள்ளையடிக்க வந்த வாலிபரை ஓடவிட்ட விதவை பெண்.! மராட்டியத்தில் ருசிகர சம்பவம்

மும்பை,

மும்பை போரிவிலி பகுதியில் 53 வயது விதவை பெண் தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு விதவை பெண் தரை தளத்தில் உள்ள வீட்டின் அறையில் தூங்கிக்கொண்டு இருந்தார். அந்த அறையின் கம்பியில்லாத ஜன்னல் கதவு சரியாக பூட்டப்படவில்லை. இதை பயன்படுத்தி அதிகாலை 2 மணியளவில் 25 வயது மதிக்கத்தக்க போதை ஆசாமி விதவை பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்தான். இந்தநிலையில் சத்தம்கேட்டு விதவை பெண் எழுந்தார். அவர் அறையில் முகமூடி அணிந்து மர்ம வாலிபர் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் விதவை பெண்ணை தாக்கி வீட்டில் கொள்ளை அடிக்க முயன்றார். கொள்ளையனிடம் இருந்து எப்படி தப்பிக்கலாம் என நினைத்த விதவை பெண்ணுக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது. உடனே தன்னுடன் மல்லுக்கட்டிய வாலிபரிடம் தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக கூறினார். மேலும் தனது ரத்தத்தை உன் மீது பூசிவிடுவேன் என மிரட்டினார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த வாலிபர், விதவை பெண்ணின் ரத்தம் தன் மீது பட்டால் தனக்கும் எய்ட்ஸ் நோய் வந்துவிடுமோ என பயந்து அங்கு இருந்து தலைதெறிக்க ஓடினான். பின்னர் விதவை பெண் பக்கத்து வீட்டுக்காரர்களை உதவிக்கு அழைத்து சரியாக பூட்டாமல் இருந்த ஜன்னல் கதவை பூட்டினார். மறுநாள் சம்பவம் குறித்து விதவை பெண் போரிவிலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனியாக இருந்த விதவை பெண்ணின் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை தேடிவருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.