சேலம், சின்ன திருப்பதி பகுதியைச் சேர்ந்தவர் குமார். எல்.ஐ.சி அதிகாரியாக இருந்து வருகிறார். இவரின் மகன் தீபன்கர் சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் நான்காம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் தீபன்கருடன் மருத்துவ படிப்பு படித்து வருபவருடைய அக்காவுக்கு நேற்றைய தினம் திருமணம் நடைபெற்றது.
இதற்கான வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முந்தினம் இரவு நடைபெற்றது. இதில், கலந்து கொள்வதற்காக இரும்பாலை அருகே உள்ள சித்தன் ஊரில் உள்ள திருமண மண்டபத்திற்கு சென்று விட்டு, திரும்பி தனது வீட்டிற்கு இரவு 10.30 மணியளவில் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது சூரமங்கலம் புதுரோட்டை கடந்து ரெட்டிபட்டி ரயில்வே மேம்பாலத்தில் ஏறி இறங்கினார். அப்போது முன்னே சென்று கொண்டிருந்த பால்வண்டி ரோட்டின் நடுவில் சென்று கொண்டிருந்துள்ளது. இதனால் தீபன்கர் இடது பக்கம் ஏறி செல்ல முயற்சி செய்ததாக சொல்லப்படுகிறது. அப்போது முன்னாள் சென்ற பால்வண்டியும் வேகமாக இடது பக்கம் சென்று திடீரென பிரேக் அடித்துள்ளது. இதில் பைக்கில் வந்த தீபன்கர், பால் வண்டியில் பின்புறம் மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். பின்னர் சம்பவம் அறிந்து வந்த சூரமங்கலம் போலீஸார் தீபன்கரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிகிச்சை பலனின்றி தீபன்கர் உயிரிழந்தார்.
இது குறித்து போலீஸார் விசாரணை செய்ததில், இறந்து போன தீபன்கர் தமிழக காவல்துறை ஏடிஜிபி அருணின் அண்ணன் மகன் என்பது தெரிய வந்தது. மேலும் விபத்துக்குறித்து அப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் ஏதும் உள்ளதா என்று ஆய்வு செய்தனர். ஆனால் அப்படி எதுவும் கிடைக்கவில்லை.
மேலும் சம்பவ இடத்தில் இருந்த பால்வண்டியை வைத்து விசாரணை செய்ததில், அது ஆவின் பால்வண்டி என்றும், ஓட்டிச் சென்றது சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பது கண்டறியப்பட்டு அந்நபர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் தீபன்கர் உடலை பிரேத பரிசோதனைக்கு பின் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் இது குறித்து தீபன்கர் உடன் படித்து வரும் நண்பர்கள் கூறியபோது, “தீபன்கர் எல்லோரிடமும் இயல்பாக பழகக் கூடியவர். மது அருந்துவது போன்ற எந்த பழக்கவழக்கங்களும் கிடையாது. ஒரு போதும் வாகனத்தை வேகமாக ஓட்ட மாட்டார். இப்படி இருந்த போது விபத்தில் இறந்ததாக கூறுவதை எங்களால் நம்ப முடியவில்லை. நேற்று முதல் நாள் எங்களுடன் படிக்கும் மாணவி ஒருவரின் அக்கா திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தான் சென்றிருந்தார். திரும்பும் போது இது போன்ற அசம்பாவிதங்கள் நடந்துள்ளது” என்றனர்.