புதுடெல்லி: டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையில் 56 கிலோ ஓபியம் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.40 கோடி ஆகும்.
மணிப்பூர், அசாம், பிஹார், மேற்குவங்கம், டெல்லி/தேசிய தலைநகர் மண்டலம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் ஓபியம் போதைப் பொருள் கடத்தும் தொழிலில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளதாக வட மண்டல போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்த கடத்தல் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
மணிப்பூர்-மியான்மர் எல்லையில் ஓபியம் மூலப் பொருட்களை வாங்கி, மியான்மரை சேர்ந்த விநியோகஸ்தர்கள் விற்பனை செய்வது விசாரணையில் தெரியவந்தது. அசாம் மாநிலத்தின் போகாஜன் பகுதியைச் சேர்ந்த நிர்மல் என்பவரின் உத்தரவின் பேரில் ஜம்முவைச் சேர்ந்த பரம்ஜித் சிங்(53), ராஜ்குமார்(38) ஆகியோர் ஓபியம் போதைப் பொருளை லாரியில் கடத்தி வருவது விசாரணையில் தெரியவந்தது. மணிப்பூரைச் சேர்ந்த தங்காய் என்பவரிடம் ஓபியம் போதைப் பொருட்களை வாங்கி, அவற்றை பரம்ஜித் சிங் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் லாரியில் டெல்லியின் மங்கோல்பூரி இன்டஸ்ட்ரியல் பகுதிக்கு கொண்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்களை கைது செய்வதற்காக நடத்தப்பட்ட சோதனையில் பரம்ஜித் சிங்கிடம் 5 கிலோ ஓபியமும், லாரியில் 51 கிலோ ஓபியமும் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளாக மாநிலங்களுக்கு இடையே ஓபியம் போதைப் பொருளை கடத்தி வருவதாக அவர்கள் ஒப்புக் கொண்டனர். அவர்கள் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.