மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, இணையமைச்சர் முருகன் தலைமையிலான உயர்மட்டக்குழு, இன்று முதல் வரும் 24 வரை, நார்வேக்கு பயணம் மேற்கொண்டுள்ளது; குழுவில் இத்துறையின் உயர்அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த, 2010ல் இந்தியா – நார்வே இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்பு துறையில் இருதரப்பும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இந்த பயணத்தின் நோக்கம். இன்று முதல் வரும் 24ம் தேதி வரை நார்வேயில் நடைபெறும் வர்த்தக கண்காட்சியில் பங்கேற்கிறார்கள்.
இக்கண்காட்சியானது, மீன்வளர்ப்பு தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான உலகின் மிகப்பெரிய வர்த்தக நிகழ்ச்சியாகும்.
நீடித்த மற்றும் லாபகரமான மீன்வளர்ப்புக்கான சமீபத்திய முன்னேற்றங்களுக்கு இக்கண்காட்சியில் தீர்வுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீன் ஆரோக்கியம், தீவனம், மரபியல், உபகரணங்கள், செயலாக்கம் மற்றும் சந்தைப்படுத்துதலில் நிபுணத்துவம் பெற்ற நார்வே நிறுவனங்களுடன் இந்திய பிரதிநிதிகள் குழு ஆலோசனை நடத்துகிறது.
மீன்பிடி கப்பல்கள், மீன்பிடி துறைமுகங்கள், குஞ்சு பொரிப்பகங்கள், கூண்டு பண்ணைகள் மற்றும் கடல் உணவு பதப்படுத்தும் அலகுகளின் அதிநவீன வசதிகளையும் பார்வையிட்டு, ஒத்துழைப்பு மற்றும் முதலீட்டின் சாத்தியக்கூறுகளை ஆராயும். நார்வேயில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்துரையாடி, மீன்பிடித் துறையில் இந்தியாவின் முயற்சிகள் மற்றும் சாதனைகள் குறித்து அவர்களுக்கு எடுத்துரைத்து, ஆலோசனைகளையும் கருத்துக்களையும் நமது பிரதிநிதிகள் பெறுவர்.
இந்த பயணம், மீன்பிடித் துறையில் இந்தியா – நார்வே இடையிலான பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதுடன், எதிர்காலத்தில் கூட்டாண்மை மூலம் கணிசமான வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement